தங்கத்தை விடுங்க.. தங்க பத்திரம் வாங்குங்க - எங்கே, எப்படி, எவ்வாறு? முழு விபரம்

By Raghupati R  |  First Published Jun 19, 2023, 11:46 AM IST

இந்திய அரசின் தங்க பத்திர திட்டம் (Sovereign gold bond scheme) ஜூன் 19ம் தேதியான இன்று தொடங்கப்படுகிறது. தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றன. இதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.


மத்திய அரசின் தங்கப் பத்திரம் (SGB) திட்டம் என்று அழைக்கப்படும் தங்க பத்திர திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.  தங்கத்தில் முதலீடு செய்ய இன்றைய காலகட்டத்தில் ஏராளமான அம்சங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் மிக விருப்பமான ஆப்சனாகப் பார்க்கப்படுவது, ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரங்கள் ஆகும். பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதால் இறையாண்மை தன்மை கொண்ட முதலீடாக பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில், தங்கத்திற்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்படும். கூடுதலாக செய்கூலி, சேதாரம் எதுவும் கிடையாது.

தங்கப் பத்திர விலை

Tap to resize

Latest Videos

தற்போதைய தொடர் ஒரு யூனிட் ரூ.5,926க்கு கிடைக்கும். தங்கப் பத்திரத் திட்டத்தின் ஒவ்வொரு யூனிட்டும் ஒரு கிராம் தங்கத்திற்குச் சமம் ஆகும்.

விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சந்தா காலத்துக்கு முந்தைய வாரத்தின் கடைசி மூன்று வேலை நாட்களில் தொழில்துறை அமைப்பான இந்தியா புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) வெளியிட்ட தங்கத்தின் இறுதி விலையின் (999 தூய்மை) எளிய சராசரியை வைத்து பத்திரங்களின் விலை கணக்கிடப்படுகிறது.

முக்கிய நாட்கள்

ஜூன் 19 திங்கள் முதல் ஜூன் 23 வெள்ளி வரை ஐந்து நாட்களுக்கு தங்கப் பத்திரங்கள் கிடைக்கும்.

தள்ளுபடி

டிஜிட்டல் முறைகள் மூலம் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ.50 தள்ளுபடி பொருந்தும். எனவே, தள்ளுபடிக்குப் பிறகு ஒரு யூனிட் விலை ரூ.5,876 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லாக்-இன் காலம்

இறையாண்மை தங்கப் பத்திரங்கள் எட்டு ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் வருகின்றன. முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே முன்கூட்டியே வெளியேற முடியும். ஆனால் நீங்கள் வெளியேறும் போது வருமான வரி இதற்கு கட்ட வேண்டும்.

தங்கப் பத்திரங்களை ஏன் வாங்க வேண்டும்?

விலைமதிப்பற்ற உலோகத்தின் மீதான சந்தை-இணைக்கப்பட்ட வருமானத்திற்கு மேலதிகமாக, அரசாங்க ஆதரவு தங்கப் பத்திரத் திட்டமானது ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியை வழங்குகிறது. இது அரை ஆண்டு அடிப்படையில் செலுத்தப்படும். நீங்கள் முதலீடு செய்திருக்கும் தங்கத்துக்கு வட்டி வாயிலாக அதிக வருமானம் ஈட்டிக்கொள்ளலாம்

தங்கப் பத்திரங்களை யார் வாங்கலாம்?

 தங்க பத்திரம் வாங்க விரும்பும் முதலீட்டாளர்கள் இந்தியக் குடியுரிமை பெற்ற நபர்கள், HUFகள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் வாங்கலாம்.

முதலீட்டு வரம்பு: 

முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு யூனிட் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். தனிப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் HUF களுக்கு ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வரம்பு நான்கு கிலோகிராம் (4,000 யூனிட்கள்) மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு 20 கிலோகிராம்கள் (20,000 யூனிட்கள்) வரை வாங்கலாம்.

தங்கப் பத்திரங்களை எங்கே வாங்குவது?

பத்திரங்கள் வணிக வங்கிகளில் (சிறு நிதி வங்கிகள், கட்டண வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் தவிர), ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, நியமிக்கப்பட்ட தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE ஆகியவற்றில் கிடைக்கும்.

வருமான வரி

திட்டத்தின் மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். ஆனால் குறியீட்டு பலன்களுக்கு தகுதியுடையது. தங்கப் பத்திரங்களை மீட்பதன் மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயங்கள், முதிர்வு காலம் வரை முதலீடு வைத்திருந்தால், மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

SGB 2023-24: ஜூன் 19 அன்று தொடங்கவுள்ள தங்க பத்திர விற்பனை.. முதலீட்டாளர்களே மிஸ் பண்ணீடாதீங்க..!

click me!