எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியீடு - மாஸ் அப்டேட் கொடுத்த ஸ்கோடா

By Kevin KaarkiFirst Published Mar 7, 2022, 11:32 AM IST
Highlights

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும் திட்டம் பற்றிய அறிவித்து இருக்கிறது.

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருவதாக அந்நிறுவன அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பெட்ரோல் வாகனங்களுக்கு அடுத்தப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவே ஸ்கோடா திட்டமிடுகிறது. இடையில் CNG மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி எந்த திட்டமும் இல்லை என அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார். 

2030 வாக்கில் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் 25 முதல் 30 சதவீத பங்குகளை எட்டியிருக்கும் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா எதிர்பார்க்கிறது. "இந்தியாவில் நீண்ட கால திட்டத்தின் அங்கமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்க வேண்டும். இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் எங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்," என ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர்  ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார். 

இதர ஃபோக்ஸ்வேகன் குழும நிறுவனங்களான ஆடி மற்றும் போர்ஷ் உள்ளிட்டவை ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்கி விட்டன. இரு நிறுவனங்களும் உயர் ரக எலெகெட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய துவங்கி விட்டன. "எங்கள் குழுமத்தின் சார்பில் அறிமுகம் செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களை கொண்டு இந்த தொழில்நுட்பம் இந்திய சாலைகளில் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ள உதவும். இதன் மூலம் விற்பனை சார்ந்த கள நிலவரத்தையும் அறிந்து  கொள்ள முடியும்," என ஜாக் ஹாலிஸ் மேலும் தெரிவித்தார். 

இந்திய சந்தையில் ஸ்கோடா எலெக்ட்ரிக் கார்கள் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றி ஸ்கோடா தரப்பில் இதவரை சரியான பதில் அளிக்கப்படவில்லை. தற்போது ஸ்கோடா நிறுவனம் குஷக், ஸ்லேவியா, ஆக்டேவியா, சூப்பர்ப் மற்றும் கோடியக் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 

click me!