
HCL நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சிவ நாடார் திடீரென விலகியுள்ளார். இதனையடுத்து, அப்பொறுப்பை தனது மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL டெக்னாலஜூஸ் செபி அமைப்பில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 2,925 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஈட்டிய லாபத்தைவிட 705 கோடி ரூபாய் அதிகமாகும். இந்நிலையில், HCL நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து சிவ நாடார் திடீரென விலகியுள்ளார். இதனையடுத்து, புதிய தலைவராக அவரது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவை நியமித்துள்ளார்.
இயக்குநர்கள் குழு மற்றும் நிறுவனத்தின் முடிவின்படி, 17-ம் தேதி. ஜூலை, 2020-இல் இருந்து புதிய தலைவராக ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா நியமிக்கப்படுவதாக HCL அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக சிவ நாடார் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 வயதான ரோஷிணி, 2019 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸின் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 54-வது இடத்தைப் பிடித்தார். ரோஷிணி நாட்டின் பணக்கார பெண்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
2019-ஆம் ஆண்டில், ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் தரவரிசையில் அவரது சொத்து மதிப்பு ரூபாய் 36,800 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரோஷிணி, கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். HCL குழுமத்தில் சேருவதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.