
சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, போன்றவற்றால் மும்பை, தேசியப் பஹ்குச்சந்தைகள் உயர்வுடன் இன்று வர்த்தகத்தை தொடங்கின. இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
உயர்வு
பங்குச்சந்தையில் நேற்று காலையில் பெரும் சரிவு காணப்பட்டநிலையில் பிற்பகலுக்குப்பின் மீண்டு, லேசான இறக்கத்துடன் வர்த்கத்தை முடித்தது. ஆனால், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குகளை வாங்கியும், கைமாற்றவும் செய்கிறார்கள்.
போர் நிலவரம்
இருப்பினும், உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் எவ்வாறு செல்லும் என்பதை உன்னிப்பாக முதலீட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள். ஐரோப்பிய யூனியன் கூட்டம் இன்றுடன் முடிகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ரஷ்யா மீது கூடுதலான பொருளாதாரத் தடைகளை விதிப்பார்களா என்று முதலீட்டாளர்கள் கவனிப்பார்கள்.
அமெரிக்கா எச்சரிக்கை
அதுமட்டுமல்லாமல் உக்ரைன் மக்கள் மீது ரசாயனவெடிகுண்டுகள், உயிரிவெடிகுண்டுகளை ரஷ்யா பயன்படுத்தினால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருப்பதையும் முதலீட்டாளர்கள் கவனிக்கிறார்கள்.
உள்நாட்டு காரணிகள்
மேலும், சந்தையில் நேற்று பங்குகளை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்தின் ருச்சி சோயா நிறுவனம் முதல்நாளிலேயே12 சதவீதம் வாங்கப்பட்டது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஆக்சிஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததால், இன்று அந்த வங்கியின் பங்குகள் எந்த அளவு சரியும் என்பதையும் முதலீட்டாளர்கள் கவனிக்கிறார்கள்.
இது தவிர பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளதால், பணவீக்கம் உயரும் சூழல் இருக்கிறது. இந்த காரணங்கள் அனைத்தையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள். சந்தையில் முதலீட்டாளர்களுக்கு கவலை தரக்கூடிய சூழல் ஏதும் இல்லை என்பதால், உற்சாகமாக காலையிலிருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் அமெரிக்க பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் முடிந்தது, ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்றமும், இறக்கமும் கலந்திருப்பது, ஹாங்காங், ஷாங்காய், நிக்கி, கோஸ்பி, தைவான் சந்தைகளும்சாதகமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வுடன், 57,467 புள்ளிகளுடனும் தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 45 புள்ளிகள்ஏற்றத்துடன் 17267 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன
லாபம், இழப்பு
மும்பைப் பங்குச்சந்தையில் பஜாஜ் நிறுவனம், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, பார்திஏர்டெல், மகிந்திரா அன்ட் மகிந்திரா, கோடக் வங்கி ஆகியநிறுவனப் பங்குகள் லாபத்தில் செல்கின்றன. டைட்டன், பவர்கிரிட், நெஸ்டில், ஹெச்டெஎப்சி வங்கி, மாருதி ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன. நிப்டியில், ஆட்டமொபைல், உலோகம், பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் லாபத்தில் உள்ளன. வங்கி, தகவல்தொழில்நுட்பம், மருந்துத்துறை, எப்எம்சிஜி ஆகிய துறைகள் சரிவில் உள்ளன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.