சர்வதேச காரணிகள், அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு போன்ற காரணங்களால் மும்பைப் பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று காலை சரிவுடன் தொடங்கியது.
போர் நிலவரம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வந்துவிடும் என முதலீட்டாளர்கள் நினைப்புக்கு மாறாக போர் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்தசில நாட்களாக குறைந்தவந்த கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 4 டாலர்அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்க வங்கி
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பெடரல் வங்கி கடந்தவாரம்தான் கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில் அந்த வங்கியின் தலைவர் ஜோரம் பவெல் அளித்த பேட்டியில் “ பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்து பெடரல் வங்கி சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும். தேவைப்பட்டால் மேலும் 25 புள்ளிகள் வட்டியை அதிகரிப்போம்” எனத் தெரிவித்திருந்தார். இது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
பணவீக்கம்
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் அளித்த பேட்டியில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரித்தபோதிலும், தொடர்ந்து வட்டியை உயர்த்தாமல் இருந்து வருகிறோம். இது எத்தனை நாட்களுக்கு தொடரும் எனத் தெரியாது” எனத் தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய யூனியன்
மேலும், ஐரோப்பிய யூனியன் கவுன்சில் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிக்கும் முடிவு எடுக்கப்படலாம் என்பதால், சந்தையை முதலீட்டாளர்கள் கூர்ந்து உற்றுநோக்கி வருகிறார்கள். இதனால் பெரிதாக எந்த முதலீட்டையும் செய்யாமல் ஊசலாட்ட மனநிலையுடனே வர்த்தகம் செய்து வருகிறார்கள்
பெட்ரோல் டீசல் விலை
கடந்த 130 நாட்களுக்குப்பின் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. இதையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள். பெட்ரோல் டீசல் விலை உயரும்பட்சத்தில் அடுத்தடுத்து இந்த விலைஉயர்வு பொருட்களின் மீது எதிரொலிக்கும், பணவீக்கம் அதிகரிக்கும். அனைத்தும் கவனித்து கவனத்துடன் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
சரிவு
இதனால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் சரிவுடனே தொடங்கியது. மும்பைப்பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 135 புள்ளிகள் சரிந்து, 57,157 புள்ளிகளில் தொடங்கியது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 30 புள்ளிகள் குறைந்து, 17,088 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
லாபம்
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 17 பங்குகள் சரிவுடன் நகர்கின்றன, 13 பங்குகள் லாபத்தில்செல்கின்றன. குறிப்பாக கோடக் வங்கி, பஜாஜ்பின்சர்வ், ஐசிஐசிஐ,ஐடிசி, இன்டஸ்இன்ட்வங்கி, ஹெச்டிஎப்சி , மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஹெட்சிஎப்சி, ஆக்சிஸ்வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்ட்லே, இந்துஸ்தான் யுனிலீவர் இழப்பில் செல்கின்றன
மாறாக, டாடா ஸ்டீல், விப்ரோ,டிசிஎஸ், மாருதி, டெக்மகிந்திரா, ஹெச்சிஎல், சன்பார்மா, டாக்டர்ரெட்டிஸ், பவர்கிரிட், என்டிபிசி, ரிலையன்ஸ், இன்போசிஸ், டைட்டன், லார்சன் அன்ட் டூப்ரோ உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் செல்கின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.