
இந்திய, மும்பைப் பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கி, பிற்பகலில் சரியத் தொடங்கி, லேசான உயர்வுடன் முடிந்தன. பங்குச்சந்தையில் வர்த்தகம் முழுக்க ஏற்ற இறக்கமே காணப்பட்டது.
இன்று மட்டும் மும்பைப் பங்குச்சந்தை சென்செக்ஸ் 865 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தகம் முடிவில் அதை இழந்து லேசான உயர்வுடன் முடிந்தது.
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து வட்டிவீதத்தை உயர்த்துவோம் என்று பெடரல் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி நேற்று கடனுக்கான வட்டிவீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது.கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக இதுபோன்று 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செய்தியும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
ஒருபுறம் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை உயர்த்துகிறது, மறுபுறம் பெடரல் வங்கி வட்டியை உயர்த்துவது முதலீட்டாளர்களுக்கு சற்று தயக்கத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் காலை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் தகவல் தொழில்நுட்ப பங்குகளையும், வங்கிப்பங்குகளையும் ஆர்வத்துடன் வாங்கினர். இதனால் பங்குச்சந்தையில் ஏற்றமான போக்கு தென்பட்டது. ஆனால் பிற்பகலுக்குப்பின் சரிவை நோக்கிப் பயணித்தது. வர்தத்கத்தின் இடையே 865 புள்ளிகள் வரை உயர்ந்துவந்த சென்செக்ஸ் பிற்பகலில் சரியத் தொடங்கியது.
வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் அதிகரித்து, 55,702 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 5 புள்ளிகள் அதிகரித்து, 16,682 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது.
நிப்டியில் இன்டஸ்இன்ட்வங்கி, டாடா கன்சூமர் , பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமென்ட், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் சரிவில் முடிந்தன. டெக் மகிந்திரா, ஹீரோமோட்டார்ஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ பங்குகள் லாபத்தில் முடிந்தன
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 14 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் மற்றவை சரிவிலும் முடிந்தன. டெக்மகிந்திரா, ஹீரோ மோட்டார்ஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலாஜிஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், ஐடிசி, டிசிஎஸ், கோடக் மகிந்திரா, ஐசிஐசிஐ வங்கி,மாருதி, என்டிபிசி ஆகியபங்குகள் லாபத்தில் முடிந்தன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.