share market today: முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நஷ்டம்: பங்குச்சந்தை சரிவுக்கு காரணங்கள் என்ன?

By Pothy RajFirst Published May 19, 2022, 11:19 AM IST
Highlights

share market today :தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை இன்று காலை மோசமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை இன்று காலை மோசமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பைப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் 1100 புள்ளிகள் சரிந்து, 53,182 புள்ளிகளில் நடந்து வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 305 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 15,934 புள்ளிகளில் வரத்தகம் நடக்கிறது. 

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 பங்குகளும் சரிவுடனே தொடங்கின. நிப்டியில் தகவல் தொழில்நுட்பம், உலோகம், பொதுத்துறை வங்கித்துறை பங்குள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஊடகம, நிதிச்சேவை, வங்கிகள், ஆட்டோமொபைல் துறைப் பங்குகளும் சரிவில் உள்ளன

மும்பைப் பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் முடிவில் சந்தை மதிப்பு ரூ.255.70லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இன்று காலை ஏற்பட்ட சரிவால்,  முதலீட்டாளர்களுக்கு ரூ.4.73 லட்சம் கோடி சரிவு ஏற்பட்டு, சந்தை மதிப்பு ரூ.251 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது. ஏறக்குறைய காலை நேர வர்த்தகத்தில் 3 முதல் 4 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கியமாக 4 காரணங்கள் சந்தை வல்லுநர்களால் முன்வைக்கப்படுகிறது. 

அமெரிக்க சந்தைகளில்சரிவு

அமெரிக்கப் பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்ட சரிவு இந்தியப் பங்குசந்தையில் இன்று எதிரொலித்து வருகிறது. அமெரி்க்காவின் சில்லரை வர்த்தகர்களின் பங்குகள் ஒரேநாளில் 25 சதவீதம் சரிவடைந்தன. அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஷ்டாக் 4 சதவீதம் நேற்று சரிந்தது. அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம்,வருவாயை கடுமையாகப் பாதித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டிவீதத்தை தொடர்ந்து உயர்த்தும் என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட சரிவு இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது

ஆசியச் சந்தையில் எதிரொலி

அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு ஆசியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. சீனாவின் இன்டர்நெட் நிறுவனமான டென்சென்ட் மார்ச் காலாண்டு முடிவில் லாபம் பாதியாகக் குறைந்தது, வருவாய் பெருகவில்லை. கொரோனாவில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் சீனப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. ஆசியப் பங்குச்சந்தையில் ஹாங்காங் 2.5 சதவீதம், டோக்கியோ 2 சதவீதம், தாய்வான், கொரியப் பங்குச்சந்தைகளும் 2 சதவீதம் சரிந்தன

வட்டிவீதம் உயரலாம்

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஜூன் மாதத்தில் நடக்கும் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்திலும் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும். குறைந்தபட்சம் 50 புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம்,முன்பு 35புள்ளிகள் என்று கூறியிருந்தோம் அதைவிட அதிகரிக்கலாம் என்று நோமுரா சந்தை நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 35 புள்ளிகளும், அக்டோபர், டிசம்பர், 2023 பிப்ரவரி, ஏப்ரலில் தலா 25 புள்ளிகளும் உயர்த்தப்படலாம் எனத் தெரிவித்திருந்தது.

அந்நியச் செலவாணி வெளியேற்றம், ரூபாய் மதிப்பு சரிவு

அமெரிக்கபெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியதால், அமெரிக்க டாலர் வலுப்பெற்று வருகிறது. இது இந்திய ரூபாய்க்கு கடும் நெருக்கடியை அளித்து வருகிறது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெறுவதால், டாலர் வெளியேற்றம் அதிகமாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை நோக்கிப் பயணிக்கிறது. இதனால் ரூபாய் மதிப்பு ரூ.77.67 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

மே மாதத்தில் மட்டும் ரூ.30ஆயிரம் கோடி அந்நிய முதலீடு வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை ரூ.1.57 லட்சம் கோடி அந்நிய முதலீடு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது
இவை அனைத்தும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணங்களாகும்.

click me!