Russia Ukraine war:எதும் விற்கமாட்டோம்: ரஷ்யாவுக்கு 'ஷாக்' கொடுத்த அமேசான்

By Pothy RajFirst Published Mar 10, 2022, 12:02 PM IST
Highlights

Russia Ukraine war:ரஷ்யாவுக்கும், பெலாரஸ் நாட்டுக்கும் எந்தவிதமான பொருட்களையும் விற்கமாட்டோம், ப்ரைம் வீடியோ இணைப்பையும் ரத்து செய்வோம், இரு நாடுகளைச் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்களை அனுமதிக்கமாட்டோம் என்று அமேசான் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கும், பெலாரஸ் நாட்டுக்கும் எந்தவிதமான பொருட்களையும் விற்கமாட்டோம், ப்ரைம் வீடியோ இணைப்பையும் ரத்து செய்வோம், இரு நாடுகளைச் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்களை அனுமதிக்கமாட்டோம் என்று அமேசான் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருளாதாரத் தடை

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்தப் போக்கிற்கு தண்டனையாக அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள், கனடா, பிரிட்டன் ஆகியவை பொருளாதாரத் தடை விதித்தன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

ரஷ்யாவுக்குப்பதிலாக வேறு நாட்டிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கவும் மாற்று வழியை அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவை தனிமைப்படுத்தும் தண்டனையை மேற்கத்திய நாடுகள் அளித்து வருகின்றன.

நிறுத்தம்

உக்ரைன் மீது ரஷ்யாவின் போருக்கு எதிராக ஏற்கெனவே ரஷ்யாவிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன, பொருட்கள் உற்பத்தி, விற்பனை, முதலீடு ஆகியவற்றையும் நிறுத்தியுள்ளன.

குறிப்பாக சாம்ஸங், ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், பேபால், மைக்ரோசாப்ட், போர்ட்,  உள்ளிட்ட பலநிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்திவிட்டன. மாஸ்டர்கார்டு, விசா நிறுவனங்கள்கூட தங்கள் வர்த்தக சேவையை ரஷ்யாவுக்கு நிறுத்திவிட்டன. கோக், உள்ளிட்ட பல்வேறு உணவு நிறுவனங்களும் ரஷ்யாவில் விற்பனையை ரத்து செய்துள்ளன.

அமேசான் அதிரடி

இந்நிலையில் மிகப்பெரிய ஆன்-லைன் விற்பனை நிறுவனமான அமேசானும் ரஷ்யாவில் தனது சில்லரை வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவில் தனது ப்ரைம் வீடியோ வசதியையும் ரத்து செய்வதாகவும், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனிமேல் புதிதாக அமேசானில் சேரமுடியாது எனவும் அமேசான் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு இனிமேல் சில்லரை வர்த்தகம் தொடர்பாக எந்தவிதமான பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படாது, அமேசான் வெப்-சீரிஸ் அனைத்தும் ரஷ்யா, பெலாஸில் மட்டும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கேமிங் நிறுவனங்கள்

அமேசான் மட்டும்லாது கேம் நிறுவனங்களான, இஏ கேம்ஸ், சிடி ப்ராஜெக்ட் ரெட், டேக் டூ, யுபிசாப்ட், ஆக்டிவிஷன் பிளிஸார்டு, எபிக் கேம்ஸ் ஆகியவையும் தங்களின் சேவையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும், நிதித்தடைகளையும் விதித்து நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளன. உலக நாடுகளுக்கு வங்கிப் பரிமாற்றத்துக்கு உதவும் ஸ்விஃப்ட் முறையையும் ரஷ்யாவுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது அந்நாட்டுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். 

சீனா பக்கம் சாயும் ரஷ்யா

இதனால் சீனாவின் பக்கம் சாய்ந்துள்ள ரஷ்யா, சீனாவின் யூனியன்பே சிஸ்டத்தை அமல்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் முடிவில் உள்ளது. இதை விரைவில் ரஷ்ய வங்கிகள் தொடங்கும் எனத் தெரிகிறது
 

click me!