
இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் டாலருக்கு எதிராக ரூ.77.46ஆகச் சரிந்துவிட்ட நிலையில் அது இந்தியப்பொருளாதாரத்திலும், மக்கள் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த செய்தி அலசுகிறது
இந்தியாவில் பணவீக்கம் மேலும் மோசமாகும் என்ற அச்சம், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது, அமெரிக்க பொருளாதார சீரடைந்து வருவது போன்ற காரணங்களால் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெற்றனர்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இதன் காரணமாக டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.77.46ஆகக் குறைந்தது. அதுமட்டுமல்லாமல் மார்ச் மாதத்தில் பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டியிருக்கிறது, ஏப்ரல் மாதத்தில் 7சதவீதத்துக்கு அதிகமாகச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
ரூபாய் மதிப்பு சரிவால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரி்ப்பு, அந்நியச் செலாவணி வெளியேற்றம், அமெரிக்க டாலர் வலுப்பெற்று வருவது போன்றவை இந்த ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பை 4 சதவீதம் குறைத்திருக்கிறது.
வர்த்தகப் பற்றாக்குறை
ஏப்ரல் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு 2000 கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவு இறக்குமதி செய்வதுதான். நாட்டின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறையும் ஜிடிபியில் 1.5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக நடப்பு நிதியாண்டில் அதிகரி்க்க வாய்ப்புள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்தியச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1900 கோடி டாலர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். 2021ம் ஆண்டில் 700 கோடி டாலர்களும், 2020ம் ஆண்டில் 1400 கோடி டாலர்களும், 2019ம் ஆண்டில் 1900 கோடி டாலர்களும் வெளியேறியது. அந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த5 மாதங்களில் டாலர் வெளியேற்றம் அதிகமாகும்.
முதலீடு வெளியேற்றம்
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி, அந்நாட்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வருவதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைக்க விரும்புகிறார்கள். சர்வதேச அளவில் வர்த்தகத்தில் நிலவும் நிலையற்ற போக்கால் இழப்பைச்ச சந்திக்க விரும்பாமல், முதலீட்டை திரும்பப் பெற்று டாலரில் முதலீடு செய்கிறார்கள்.
இந்தியா மற்றும் ஆன்டிபோட்ஸ் பார்க்லேஸ் முதலீட்டு வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் ராகுல் பஜோரியா கூறுகையில் “ டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மட்டும் வீழ்ச்சி அடையவில்லை. சீனாவின் யுவான், கொரியாவின் வான், ஜப்பானின் யென் ஆகியவையும் இந்திய ரூபாயைவிட அதிகமாக கடந்த 4 மாதங்களில் சரிவைச்சந்தித்துள்ளன. ஆசிய நாடுகளில் ஏராளமான கரன்ஸிகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
இறக்குமதி காஸ்ட்லியாகும்
இந்திய ரூபாய் மதிப்பை பலவீனமடையச் செய்ததில் முக்கியமானது பணவீக்கமாகும். இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும்போது, பேரல் 100 டாலரைக் கடக்கும்போது, டாலரை அதிகமாகச் செலவிட வேண்டும். ஏற்கெனவே ரூபாய் மதிப்பு பலவீனமடைந்தநிலையில் அது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். உரம், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்குஇந்தியா பெரும்பாலும் வெளிநாடுகளைத்தான் நம்பி இருக்கிறது. நாட்டின் உர இறக்குமதிக்கான மானியம் நடப்பு நிதியாண்டில் ரூ.1.90 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது.
ஆதலால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்போது, இறக்குமதி பொருட்கள் அனைத்தும் விலை அதிகமாகும். ஆனால், ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒருவகையில் சாதகமாக இருக்கும். ஆனால், சர்வதேச அளவில் தேவை குறைவாக இருக்கும்போது, சந்தையில் ஊசலாட்டம் நிலவும்போது, ஏற்றுமதி எவ்வாறு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது” எனத் தெரிவித்தார்
சர்வதேச தேவை மந்தம்
இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் அஜெய் சாஹி கூறுகையில் “ இந்தியாவின் போட்டியாளர் கரன்ஸியின் மதிப்பு வேகமாகச் சரிந்தால் இந்தியாவால் பலன் அடைய முடியாது.
விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், பெட்ரோலியப் பொருட்கள், ஆர்கானிக் ரசாயனம், ஆட்டோமொபைல், எந்திரம் ஆகியவைதான் இந்தியாவிலிருந்து அதிகமாக ஏற்றுமதியாகிறது. சப்ளையில் ஏற்படும் சிக்கலால் பொருட்கள் உற்பத்திச் செலவு அதிகரிக்கும்.இது ஏற்றுமதியாளர்களின் லாபத்தை பாதிக்கும். ஆதலால் ஏற்றுமதியாளர்களும் பெரிதாக பலன் அடைய முடியாது. சேவைத் துறையில் இருக்கும் தொழில்களுக்கு உண்மையில் லாபம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.