அமெரிக்க டாலருக்கு எதிராக சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு 80ஆக வரும் மாதங்களில் வீழ்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு எதிராக சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு 80ஆக வரும் மாதங்களில் வீழ்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக நேற்று இந்திய ரூபாய் மதிப்பு ரூ.79.05 ஆகக் சரிந்தது. ரூ79க்கு மேல் ரூபாய் மதிப்பு சரிவது இதுதான் முதல்முறையாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அனைத்து கரன்ஸிகளுக்கும் எதிராக டாலர் வலுப்பெறுவது, இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை எடுத்து வெளியேறுவது அதிகரிப்பது, ரூபாய் மதிப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வரும் நாட்களில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 80ஆக வீழ்ச்சி அடையும் என பல பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். கொரோனாவுக்குப்பின் உலகப் பொருளதாரம் இயல்புக்கு திரும்பி வருகிறது.
இதனால், உலக நாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், கொரோனா காலத்தில் அளித்த சலுகைளையும் திரும்பப் பெற்று வருகிறார்கள். இதனால் வங்கிகளில் கடனுக்கான வட்டி உயர்ந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டிவீதத்தை தொடர்ந்து உயர்த்துவதால், இந்தியச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று, டாலரில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
எம்கே குளோபல் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர், மாதவி அரோரா, சிஎன்பிசி சேனலுக்கு அளித்தபேட்டியில் “ இந்திய ரூபாயின் மதிப்பு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்துக்குள் 80 ரூபாயாக வீழ்ச்சி அடையும். அடுத்த 3 மாதங்களுக்கு 80 ரூபாய்க்கு மேல் உயர்ந்தாலும் வியப்பில்லை இந்தியாவிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவது, கமாடிட்டி விலை அதிகரிப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த குறைவான வட்டி வீத உயர்வு போன்றவை ரூபாய் மதிப்பு தன்னை நிலைப்படுத்துவதற்கு சவாலாக இருக்கின்றன. ” எனத் தெரிவித்தார்.