மெகா கூட்டணியில் மிட்சுபிஷி - எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டம்

By Nandhini SubramanianFirst Published Jan 24, 2022, 2:06 PM IST
Highlights

புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க ரெனால்ட், நிசான் மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

பிரென்ச் ஆட்டோ உற்பத்தியாளரான ரெனால்ட், ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் மற்றும் மிட்சுபிஷி கார்ப் நிறுவனங்கள் கூட்டணி அமைக்கின்றன. மூன்று நிறுவனங்கள் கூட்டணி ரெனால்ட் நிசான் மிட்சுபிஷி அலையன்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த கூட்டணியின் நோக்கம் மற்றும் எதிர்கால திட்டம் பற்றிய அறிவிப்புகள் ஜனவரி 27 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. 

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மூன்று நிறுவனங்கள் கூட்டாக முதலீடு செய்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரென்ச் மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய இருக்கின்றன.

ஐந்து எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்ம்களில் மொத்தம் 30 எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க இந்த கூட்டணி திட்டமிட்டு இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து பிளாட்ஃபார்ம்களில் 90 சதவீத எலெக்ட்ரிக் கார்கள் 2030 ஆம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. 

இந்த கூட்டணி இணைந்து ஏற்கனவே நான்கு பொதுவான எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்ம்களை உருவாக்கிவிட்டன. இவற்றை சார்ந்து நிசான் ஆர்யா, ரெனால்ட் மெகேன் இ.வி. மற்றும் ரெனால்ட் டசியா போன்ற மாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மற்ற இரு பிளாட்ஃபார்ம்கள் மைக்ரோ மினி மாடல்களை உருவாக்குவதற்கானவை ஆகும்.

தற்போது உருவாக்கப்பட்டு வரும் ஐந்தாவது பிளாட்ஃபார்ம் பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பிளாட்ஃபார்மில் புதிய ரெனால்ட் கார் உருவாக்கப்பட இருக்கிறது. மூன்று நிறுவனங்கள் இணைந்து பொதுவான பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் வாகன உதிரிபாகங்களை பயன்படுத்த இருக்கின்றன.

click me!