
அமெரிக்கா இன்னும் பணவீக்கத்தின் உச்சத்தை பார்க்கவில்லை. அடுத்த ஆண்டில் மந்தநிலை வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றாலும் பெடரல் வங்கி நினைத்தால் தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்
பணவீக்கம்
அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் நிலவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே பெடரல் வங்கி இருமுறை வட்டிவீதத்தை உயர்த்திவிட்டது. இருப்பினும் அமெரி்க்காவில் விலைவாசி குறையவில்லை. இதனால் இந்த மாதம் நடக்கும் பெடரல் வங்கி கூட்டத்தில் 50 புள்ளிகள்வரை வட்டி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி வீதம்
அமெரிக்க பெடரல்வங்கி வட்டியை உயர்த்தினால், உலகச் சந்தை முழுவதும் அதன் தாக்கம் எதிரொலிக்கும், உலுக்கி எடுத்துவிடும். இந்நிலையில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சின்பிசி சேனலுக்குப் பேட்டியளி்த்தார். சிக்காகோ பல்கலைக்கழத்தில் ரகுராம்ராஜன் பணியாற்றி வருகிறார்.
அப்போது அவரிடம்அமெரிக்கப் பொருளாதார நிலைமை குறித்து கேள்வி எழுப்பினர். ஏற்கெனவே கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பெருமந்தம் வரும் என்று முன்பே கணித்து சரியாகக் கூறிய பெருமைக்குரியவர் ரகுராம் ராஜன். அந்த அடிப்படையில் இந்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு ரகுராம் ராஜன் அளி்த்த பதில்:
உச்சமடையவில்லை
அமெரிக்காவில் பணவீக்கம் உச்சமடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால், இல்லை. பணவீக்கம் உச்சம் அடையவில்லை. யாரும் பார்க்கவில்லை. அமெரிக்க பெடரல் வங்கி அதற்குள் பணக்கொள்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்தால் அதைத் தடுத்துவிடலாம்.
சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது, அதன் விளைவு இன்னும் முழுமையாக வரவில்லை. அதனால்தான் பணவீக்கம் உச்சத்தை பார்க்கவில்லை. சமீபத்தில் பொருளாதார வல்லுநர் லாரி சம்மர்ஸ் பேசுகையில்கூட, கடந்த 1980களில் பணவீக்கத்தைவிட இப்போது குறைவாக இருக்கிறது என்றார். பெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிக நடவடிக்கை எடுக்கிறது.
மந்தநிலை வரலாம்
வீடுகளில் சேமிப்பு பலமாக இருக்கிறது. ஆனால் நிதிச்சந்தை இனிவரும் காலத்தில் மோசமாகச்சரியும். தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைப்பதில் சுணக்கம் இருக்கக்கூடாது. ஏற்கெனவே பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையைவிட்டு நிறுத்தும் சம்பவங்களைக் கேட்டிருந்தோம். ஆதலால், பொருளாதார மந்தநிலை வரவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு அதற்கா சாத்தியங்களும், அடிப்படைகூறுகளும் உள்ளன.
யூரோ கரன்ஸி மதிப்பு சரிந்து கொண்டே செல்கிறது. அதை தடுத்து நிறுத்துவதற்கு ஐரோப்பிய கவுன்சில் வங்கிக்கு வட்டிவீதத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.