RBI: பணவீக்கம் உயர்ந்ததற்கு ரிசர்வ் வங்கியை குற்றம்சாட்டுவதா: முன்னாள் கவர்னர் சுப்பாராவ் கொந்தளிப்பு

By Pothy RajFirst Published May 18, 2022, 5:00 PM IST
Highlights

RBI: inflation: நாட்டில் பணவீக்கம் உயர்ந்ததற்கு ரிசர்வ் வங்கியின் காலதாமதமான நடவடிக்கையே காரணம் எனக் குற்றம்சாட்டுவது தவறானது, நியாயமற்றது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் டி சுப்பாராவ் மறுத்துள்ளார்.

நாட்டில் பணவீக்கம் உயர்ந்ததற்கு ரிசர்வ் வங்கியின் காலதாமதமான நடவடிக்கையே காரணம் எனக் குற்றம்சாட்டுவது தவறானது, நியாயமற்றது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் டி சுப்பாராவ் மறுத்துள்ளார்.

நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தி வைக்க ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது. ஆனால், 2022 ஜனவரி முதல் பணவீக்கம் 6 சதவீதத்தை கடந்து வருகிறது, மார்ச் மாதம் சில்லரை பணவீக்கம் 6.95 சதவீதமாகவும், ஏப்ரலில் 7.79 சதவீதமாகவும் அதிகரித்தது. தொடர்ந்து 4-வது மாதமாக பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிடக் கடந்தது. 

இதையடுத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரஅவசரமாக கடந்த வாரம் கூடிய ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ ரேட்டை 40 புள்ளிகள் உயர்த்தியது.

கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ரெப்போ ரேட்டை உயர்த்தாமல் இருந்த ரிசர்வ் வங்கி 40 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, 4.40 சதவீதமாக வட்டிவீதம் அதிகரித்தது. ஆனால், ரிசர்வ் வங்கி காலம்கடந்து வட்டிவீதத்தை உயர்த்தியிருக்கிறது, இந்த வட்டிவீத உயர்வினால் பணவீக்கம் உடனடியாகக் குறைந்துவிடாது. பணவீக்கம் இந்த அளவு வளர்ந்ததற்கு பின்னணியில் ரிசர்வ் வங்கியின் அசட்டைத்தனம் இருக்கிறு என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது: 

நாட்டில் பணவீக்கம் உயர்ந்ததற்கு பின்னணியில் ரிசர்வ் வங்கி இருக்கிறது என்று குற்றம்சாட்டுவது அபத்தமானது, நியாயமற்றது. எதிர்காலம் எப்படியிருக்கும், மாறும் என்று கணிப்பது எந்த ரிசர்வ் வங்கியாலும் முடியாது.

பணவீக்கம் உயர்ந்தநிலைக்கு சென்றவுடன் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு விரைந்து கூடி வட்டிவீதத்தை உயர்த்தியுள்ளதை அறிந்தேன். ஆனால், இந்தநடவடிக்கையால் பணவீக்கம் வேகமாக குறைந்துவிடாது. நிதிக்கொள்கைக் குழு கூடியதில்கூட பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள்

பணவீக்கம் உயர்ந்துவரும்போது அதைப் பார்த்த ரிசர்வ் வங்கி தூங்கிக்கொண்டிருந்ததா என்று கேட்கிறார்கள். பணவீக்கத்தைவிட பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா, தாமதமான நடவடிக்கை பேரியயல் பொருளதாரத்தை பாதிக்காதா, ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை குறைக்காதா என்று கேட்கிறார்கள். இந்த விமர்சனங்கள் நியாயமற்றவை

இவ்வாறு சுப்பராவ் தெரிவித்தார்

click me!