wheat Export Ban: இந்தியாவுக்கு நெருக்கடி: கோதுமை ஏற்றுமதி தடையை திரும்பப் பெற ஜி7 நாடுகள் அழுத்தம் தரலாம்

By Pothy RajFirst Published May 18, 2022, 4:33 PM IST
Highlights

G-7 increase pressure on India to reverse wheat Export Ban: கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ள நிலையில் அந்தத் தடையை விலக்கக் கோரி ஜி-7 நாடுகள் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ள நிலையில் அந்தத் தடையை விலக்கக் கோரி ஜி-7 நாடுகள் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி-7 மாநாடு

வரும் ஜூன்26முதல் 28ம் தேதிவரை ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனத் தெரிகிறது. அங்கு அவர் செல்லும்போது கோதுமை ஏற்றுமதிதடையை நீக்க வலியுறுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ரஷ்யா உக்ரைன் போர்

உலகிலேயே அதிகமாக கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ரஷ்யா, உக்ரைன். ஆனால், இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும்போரால் கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதையடுத்து, உலகிலேயே 3-வது மிகப்பெரிய கோதுமை உற்பத்தி, ஏற்றுமதியாளரான இந்தியாவின் பக்கம் உலக நாடுகள் கவனம் திரும்பியது.

விளைச்சல் குறைவு

ரஷ்யா உக்ரைன் போருக்குப்பின் இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியது. அதேசமயம், நாட்டில் நிலவும் கடுமையான வெயில், வெப்ப அலை காரணமாக இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் பாதிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல்கட்ட கணிப்பில் 111 மில்லியன் டன் கோதுமை விளைச்சல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதை 106மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது.

தடை

அதுமட்டுமல்லாமல் கோதுமை விலையும், கோதுமையால் செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. கோதுமைக்கான தேவையும் படிப்படியாக அதிகரித்தது. இதை உணர்ந்த மத்திய அரசு உள்நாட்டு தேவையை சரிசெய்யவும், விலையைக் கட்டுப்படுத்தவும் அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கோதுமை ஏற்றுமதிக்கு திடீரென தடை விதித்தது.

ஜி7 நாடுகள் நிலைப்பாடு

இந்நிலையில் நியூயார்க்கில் நடக்கும் “உலகளாவிய உணவுப்பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைக்கான அழைப்பு” கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் வி. முரளிதரன் சென்றிருந்தார். அப்போது இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை குறித்து ஜி7 நாடுகள் நிலைப்பாடு தெரியவந்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஏற்பட்டபின் உலகளவில் உணவுப்பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு முக்கியமாக இருக்கிறது. ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்பு கூட்டத்திலும் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை பேசப்படலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டன் பிளின்கன் தெரிவித்துள்ளார்.

மறுபரிசீலனை

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்பீல்ட் நேற்று வெளியிட்ட அறிக்கையில்கூட “ கோதுமை ஏற்றுமதியை தடை செய்யாமல் இருக்குநாடுகளை ஊக்கப்படுத்துவோம். மற்ற நாடுகளும் கோதுமை ஏற்றுமதியை தடை செய்யாமல்இருக்க கேட்டுக்கொள்வோம். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் நாடு இந்தியா, மற்ற நாடுகள் எழுப்பும் கவலைகளைப் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

பாரசிட்டமால் மரு்நது 

ஜெர்மனியில் வரும் ஜூன் மாதம் நடக்கும் ஜி-7 மாநாட்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை முக்கியமாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கொரோனா பரவல் காலத்தில் இந்தியாவிலிருந்து பாராசிட்டமால் மாத்திரைகள் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென தடைவிதித்தது.

ஆனால் சர்வதேச அளவில் எழுந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, அந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கோதுமை விலை உள்நாட்டில் சீரடைடந்து இயல்புநிலைக்கு திரும்பியபின் மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

click me!