RBI: corona virus: இந்தியப் பொருளாதாரம் கொரோனா இழப்பிலிருந்து மீள இன்னும் 15 ஆண்டுகள் தேவை: ஆர்பிஐ அறிக்கை

By Pothy RajFirst Published Apr 30, 2022, 9:37 AM IST
Highlights

RBI : corona virus : இந்தியப் பொருளாதாரம் கொரோனாவால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீள்வதற்கு இன்னும் 15 ஆண்டுகள் அதாவது 2035ம் ஆண்டுதான் மீளும் என்று ரிசர்வ் வங்கியின் 2022ம் ஆண்டுக்கான பணம் மற்றும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் கொரோனாவால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீள்வதற்கு இன்னும் 15 ஆண்டுகள் அதாவது 2035ம் ஆண்டுதான் மீளும் என்று ரிசர்வ் வங்கியின் 2022ம் ஆண்டுக்கான பணம் மற்றும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைனஸில் பொருளாதாரம்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய நேரத்தில் நாடுமுழுவதும் லாக்டவுன் கொண்டுவரப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு மைனஸில் சென்றது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த பொருளாதார நிலைக்கு இந்தியப்பொருளாதாரம் சென்றது. கடந்த நிதியாண்டிலிருந்துதான் பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து நாட்டின் பொருளாதாரம் முழுமையாகமீண்டு, கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டிவிட்டதா என்றால் இல்லை என்றுதான் மத்திய அரசு கூறி வருகிறது.

ஆர்பிஐ அறிக்கை

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறை  2022ம் ஆண்டுக்கான பணம் மற்றும் நிதி அறிக்கையை நேற்று வெளியிட்டது. 2021-22 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின் கருப்பொருள், "புத்துயிர் அளிப்பது மற்றும் புனரமைத்தல்" ஆகும். கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய நீடித்த மீட்சியை வளர்ப்பது மற்றும் நடுத்தர காலத்தில் வளர்ச்சியை உயர்த்துவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2035ம் ஆண்டில் மீளும்

 அதில் கூறுகையில் “ 2020-21ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் மைனஸ் 6.6 சதவீதம் அளவுக்கு சரிந்தது. 2021-22ம் ஆண்டில் 8.9 சதவீதம் வளர்ச்சியும், 2022-23ம் ஆண்டில் 7.2 சதவீதமும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் முழுமையாக 2034-35ம் நிதியாண்டில்தான் மீளும் என்று கணக்கிடுகிறோம்.

பெருந்தொற்றுநோய் பொருளாதார வளர்ச்சியில் திருப்புமுனை தருணம். இதனால் ஏற்படும் கட்டமைப்பு மாற்றங்கள் நடுத்தர காலத்தில் வளர்ச்சிப் பாதையை மாற்றும்.இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீதம் அடுத்த ஆண்டில் வளர்ச்சி அடையும் என்பது அணுமானத்தின் அடிப்படையிலான வளர்ச்சிஅறிக்கைதான். ஆனால், சர்வதேச நிதியம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையில், 2024ம் நிதியாண்டில் 6.9சதவீதம்தான் வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

வளர்ச்சி மந்தம்

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பில்கூட 2024ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது 6.3 சதவீதம்என்றுதான் மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் 2024ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்குள்தான் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். ஏனென்றால், கொரனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டுவர நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும்.

இழப்பு

நிதியின் அடிப்படையில் கணக்கிட்டால், 2021ம் நிதியாண்டில் இந்தியாவுக்கு கொரோனாவால் ரூ.19.10 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில் ரூ.17.10 லட்சம் கோடியும், 2023ம் ஆண்டில் ரூ.16.40 லட்சம் கோடியும் இழப்பு அல்லது உற்பத்தி இழப்பு ஏற்படும். 2022ம் ஆண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி மதிப்பு ரூ.147.54 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் இந்தியா பொருளாதார தேக்கநிலையிலிருந்து மீண்டுவருவதை கடுமையாகப் பாதி்த்துவிட்டது. பொருட்களின் விலை கடும் உயர்வு,சர்வதேச பொருளாதார வளர்ச்சிக் குறைவு, சர்வதேச அளவில் நிதிநெருக்கடி ஆகியவை ஏற்பட்டுள்ளன. இது இந்தியா வேகமாக மீண்டுவருவதில் சுணக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!