
உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், தானியங்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை மே மாதத்திலும் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மக்கள் மற்றொரு உயர்ந்த பணவீக்கத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் ரிசர்வ் வங்கி தனது மாதாந்திர பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி மாதாந்திர பொருளாதார அறிக்கையை நேற்று வெளியிட்டது அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மே 1ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் வெளியி்ட்ட புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தோம். இதைப் பார்க்கும்போது, மே மாதத்திலும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் விலை அதிகரிக்கும். சமையல் எண்ணெய் விலை தற்போதுள்ள நிலையில் நீடிக்கும் அல்லது உயரக்கூடும். கோதுமையின் விலை அதிகரித்ததே தானிய வகைகளி்ன் விலை உயர்வுக்குக் காரணம்.
பருப்பு வகைகள் விலை நிலையாக இருக்கிறது, உளுத்தம் பருப்பு விலை, மசூர் பருப்பு விலை அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. காய்கறிகளைப் பொறுத்தவரை தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதேசமயம், வெங்காயத்தின் விலை பெரிதாக உயரவில்லை, உருளைக்கிழங்கு விலையும் பெரிதாக உயரவில்லை. மே மாதத்தின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது இந்த மாதத்திலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும். மக்கள் மற்றொரு உயர்ந்த பணவீக்கத்தை எதிர்கொள்வார்கள்.
4 மெட்ரோ நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலையாக இருந்தாலும், சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 7 சதவீதமாகவும், ஏப்ரலில் 7.80 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் உயரும் என்பதைக் கணித்துதான் மே மாதம் முதல்வாரத்திலேயே ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தில் 40 புள்ளிகளை உயர்த்தியது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு விரைந்து செயல்பட்டு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. இது நிதிக்கொள்கைக் குழுவின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.