MK Stalin : பணவீக்கத்தால் தடுமாறும் இந்தியா: வழிகாட்டும் தமிழகம்: திராவிட மாடல் காரணமா?

By Pothy RajFirst Published May 17, 2022, 9:55 PM IST
Highlights

MK Stalin  :மத்தியில் ஆளும் பிரமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இன்று சவாலாக விஸ்வரூமெடுத்திருப்பது நாட்டின் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய இரு பிரச்சினைகள்தான். 

MK Stalin :மத்தியில் ஆளும் பிரமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இன்று சவாலாக விஸ்வரூமெடுத்திருப்பது நாட்டின் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய இரு பிரச்சினைகள்தான். 

விரைவான தீர்வு இல்லை

பொருளதாரத்தின் ஆணிவேரையை அசைத்துப் பார்க்கும் இந்த பிரச்சினைகளுக்கு ஓர் நாள் இரவில் தீர்வும் கிடைக்காது, எந்த அதிரடி முடிவு எடுத்தாலும் ஓர் இரவோடு தீர்ந்துவிடாது. பணவீக்கம் எவ்வாறு சிறுகச் சிறுக பொருளாதாரத்தின் சக்கரத்தை இறுக்கிப் பிடித்திருக்கிறதோ அதேபோன்றுதான் மெல்ல மெல்ல விடுவிக்க முடியும்.

பொருளாதாரத்துக்கு பணவீக்கம் தேவையானது. பணவீக்கம் இல்லாத பொருளாதாரத்தில் வளர்ச்சி இருக்காது. ஆனால், அந்த பணவீக்கம் அளவுடன் இருத்தல் அவசியம். அளவான பணவீக்கம் இருந்தால் பொருளாதாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும் என்பது பொருளாதார வல்லுநர்கள் கருத்து. 

வட்டிக் குறைப்பு

ஆனால் நம்நாட்டைப் பொறுத்துவரை கொரோனா காலத்துக்கு முன்புவரை பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி கட்டுப்படுத்தி வந்தது. கொரோனா தொற்றால் பொருளாதாரத்தில் மந்தநிலை, சுணக்கம் ஏற்பட்டபோது வட்டிவீதத்தை 4 சதவீதமாகக் குறைத்து சலுகை காட்டியது. 

இதனால் வங்கிகளில் குறைந்தவட்டிக்கு எளிதாக கடன் கிடைத்தது, வீட்டுக்கடன் கட்டுவோருக்கு சுமை குறைந்தது, தொழில்செய்வோருக்கு கடன் குறைந்தவட்டியில் எளிதாகக் கிடைத்தது.

வேடிக்கை

ரிசர்வ் வங்கி அளித்த சலுகைகள் அனைத்தும் பொருளாதாரம் எனும் சக்கரத்தை சுற்றிவிடுவதற்கான நடவடிக்கையாக மட்டும் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்திருந்தால் பணவீக்கம் கட்டுக்குள் இருந்திருக்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பணவீக்கம் அளவு மெல்ல மெல்ல அதிகரித்தபோதும் அதன் கடிவாளத்தை இழுத்துப்பிடிக்காமல் ரிசர்வ் வங்கி வேடிக்கைப் பார்த்தது என்பதை மறுக்க முடியாது.

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், கடந்த2 ஆண்டுகளாக கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்தவே இல்லை.

மறந்துவிட்டாரா கவர்னர்?

 ரிசர்வ் வங்கி என்பது தன்னாட்சி மிகுந்த அமைப்பு என்பதையே கவர்னர் சக்தி காந்த தாஸ் மறந்து செயல்படுகிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு வகுக்கும் கொள்கை எந்த அளவு முக்கியமோ, அதேஅளவு ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையும், கட்டுப்பாடுகளும், சலுகைகளும் முக்கியம். ரிசர்வ் வங்கி சிறிது நடுநிலை தவறினாலும், தனது சுயாட்சி தன்மையை இழந்தாலும், இலங்கை விளைவு இந்தியாவில் ஏற்படக்கூடும். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காரணம்காட்டி ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை அதிகரிக்காமல், இருந்தது மறுபுறம், பணவீக்கம் வளர்வதற்கு நீர் ஊற்றுவதாக அமைந்துவிட்டது.

கையை மீறிவிட்டது

நாட்டின் பணவீக்க அளவை ரிசர்வ் வங்கி 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைத்திருக்கிறது. ஆனால், பணவீக்கம் மெல்ல அதிகரி்த்து ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதம் என ரிசர்வ் வங்கியின் கையைமீறிச் சென்றுவிட்டது. இது உடனடியாக வந்த உயர்வு அல்ல. கடந்த 3 காலாண்டுகளாக மெல்ல மெல்ல பணவீக்கம் உயர்ந்ததன் விளைவுதான் இந்த பணவீக்கம் உயர்வாகும். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிந்த காலாண்டுக்கு முன்பிருந்தே பணவீக்கம் 5 சதவீதத்துக்கு மேல் அதிகரி்த்தது. அப்போதே ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியிருந்தால் பணவீக்கம் கட்டுக்குள் வந்திருக்கும். ஆனால் கண்கெட்ட பின் சூரிய வணக்கம் என்பதுபோல், கடந்த வாரம் அவசர அவசரமாகக் கூடிய ரிசர்வ் வங்கி,  கடனுக்கான வட்டிவீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது. ஜூன் மாதம் கூடும் நிதிக்கொள்கை கூட்டத்திலும் வட்டி வீதம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இனி என்னதான் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தினாலும் பணவீக்கம் கட்டுக்குள் வருவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

கச்சா எண்ணெய்விலை உயர்வு

நாட்டில் பணவீக்கம் உயர்ந்ததற்கு கச்சா எண்ணெய்விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு முக்கியக் காரணம் என்பதில் மறுப்பதற்கில்லை. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து மாநிலங்களிலும் எதிரொலித்தபோது, அனைத்து மாநிலங்களிலும் விலைவாசி உயர்ந்தபோது, சில மாநிலங்கள் மட்டும் பணவீக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தின, எவ்வாறு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தின என்பது வியப்புக்குரிய விஷயம்.

தமிழகம் கேரளா

2022, ஏப்ரல் மாத சில்லரை பணவீக்கம் குறித்து தேசிய புள்ளியியல் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் “ நாட்டில் 74 சதவீத மாநிலங்கள் அதாவது 26 மாநிலங்களில் பணவீக்கம் 6 சதவீதத்தைக் கடந்துவிட்டன. தமிழகம், கேரளா இரு மாநிலங்களில் மட்டும் பணவீக்கம் 5 சதவீதத்துக்கு சற்று அதிகமாக மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
தென் மாநிலங்களில் வளர்ந்த மாநிலங்களாகக் கருதப்படும் தமிழகம், கேரளாவில் பணவீக்கம் கட்டுக்குக்குள் கொண்டுவரப்பட்டது.

பாஜக ஆளும் மாநிலங்கள்

பாஜக ஆளும் மாநிலங்களில், பணவீக்கத்தைக் குறைக்க வாட் வரி குறைக்கப்பட்டது, அனைத்து மாநிலங்களையும் வாட் வரியைக் குறைக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆனால், வாட் வரியைக் குறைத்த பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உ.பி. மத்தியப்பிரதேசம், அசாம், போன்ற மாநிலங்களில் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் 7 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, ஒடிசா, மே.வங்கம் ஆகிய பாஜக ஆளாத மாநிலங்களிலும் பணவீக்கம் அதிகரி்த்துள்ளது. 

சிறந்த நிர்வாகம் தொலைநோக்கு திட்டம்

தமிழக அரசு தொலைநோக்குடன், சீரிய தி்ட்டமிடலுடன் செயல்பட்டதுதான் பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் மக்கள் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க காரணம் என்பதை மறுக்க முடியாது. 

பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் சமாளிக்க மத்தியஅரசும், ரிசர்வ் வங்கியும் திணறிவரும்போது, தமிழக அரசு வழிகாட்டியாக விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முக்கியக் காரணம் தமிழக அரசு செயல்படுத்திவரும் சமூக நலத்திட்டங்களான, தரமான மருத்துவ சுகாதார வசதி, கல்விக்கான திட்டங்கள்,போக்குவரத்து வசதிகள், சிறப்பான ரேஷன் திட்டம், ஏழைகளுக்கான திட்டங்கள் என்பதில் சந்தகேமில்லை. 

சமூக நலத்திட்டங்கள்

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடனே பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், ஆவின்  பால்விலைகுறைப்பு , பெட்ரோல் மீதான வாட் வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது போன்றவை மக்களின் சுமையை பெருமளவு குறைத்தன. 
பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல்விலை உயர்வைக் காரணம் காட்டி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியபோதிலும் இதுவரை திமுக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. மின்கட்டணத்தையும் உயர்த்தாமல் மக்களுக்கு சுமை ஏற்றாமல் இருப்பதே விலைவாசி உயராமல் இருக்க முக்கியக் காரணம்.  

சமூக நலத்திட்டங்களுக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியதற்கு என்ன தொடர்பு என்று கேட்கலாம். எந்த ஒரு அரசு தனது மக்களுக்கு தரமான மருத்துவம், கல்வி, உணவுப் பொருட்கள், சேவைகளை வழங்குகிறதோ அந்த மாநில மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறும், மக்கள் செய்யும் செலவு குறையும், உற்பத்தி பெருகும். சேமிப்பு அதிகரிக்கும். 

மக்கள் விழிப்புணர்வு

அனைத்தையும்விட கேரளா, தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வும், பொருளாதாரம் சார்ந்த விழிப்புணர்வும் மிக மிக அதிகம். மக்களுக்கான விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், எதற்கு செலவிட வேண்டும், எதன் விலை உயர்கிறது, குறைகிறது என்பதைக் கணக்கிட்டு செலவிடுகிறார்கள். 

சந்தை அமைப்பு முறை

குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை முறை, அதாவது உழவர் சந்தை, ஊர்தோறும் நடக்கும் பாரம்பரிய சந்தை முறை அதில் கடைபிடிக்கப்படும் கட்டுக்கோப்பு, சுயஒழுக்கமுறை ஆகியவை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி வைத்துள்ளன. ஒழுங்கமுறை அமைப்புக்குள் மக்களும், வியாபாரிகளும் வரும்போது, விலைவாசி இயல்பாகவே வரம்புக்கு மீறி செல்லாது. அப்போது பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். 

நிதி அமைச்சர் சீர்திருத்தங்கள்

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நிதித்துறையில் எடுத்துவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள், ஒழுக்க நடைமுறைகளின் பலன்கள் கிடைக்கத் தொடங்கிவிட்டன. பட்ஜெட்டில் முதல்முறையாக நிதிநிலை மாற்றப்பட்டதால் தமிழகத்தில் ரூ.7ஆயிரம் கோடிக்கு அதிகமாக வருவாய் பற்றாக்குறை குறைய வழி செய்யப்பட்டதே முதல் நடவடிக்கை. 

நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கத்திலிருந்து நிதித்துறையில் செய்துவரும் சீர்திருத்தங்கள், வருமானம் வராத பிரிவைக் கண்டறிந்து சிக்கலைக் களைதல், கடைக்கோடி மக்கள்வரை பலன்களை கிடைக்கச் செய்தல், சமூக நிதித்திட்டங்களின் பலன்கள் சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்தல், பதுக்குல் இல்லாத சந்தை முறைகள், ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை முறைகள், கட்டுக்கோப்பான நிர்வாகம்தான் என்பதில் மறுப்பதற்கில்லை.

திமுகவின் முன்னுரிமை

குறிப்பாக திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக நலத்திட்டங்களுக்கும், வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் மானியங்கள் மற்றும் நிதிப்பரிமாற்றங்களுக்காக மட்டும் ரூ.1.13 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூகநலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டு வருகிறதே தவிர குறைக்கப்படவில்லை. குஜராத் மாடல் ஆட்சி என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு பெருமையாகப் பேசிவரும் நிலையில் திராவிட மாடல்தான் பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, வழிகாட்டியாக இருந்து வருகிறது. 

தமிழகத்தில் பணவீக்கம், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதற்கு குறித்து பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஏசியாநெட் நியூஸ் தமிழ்  இணையதளத்துக்கு அளித்த பேட்டி: 

மத்தியில் ஆளும் பாஜக அரசு, குஜராத் மாடலை அனைத்து மாநிலங்களுக்கும் பின்பற்றக் கூறியது. ஆனால், மனிதவளக் குறியீடு, நிதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து மாடல்களிலும் பின்தங்கி இருக்கிறது, பணவீக்கமும் அதிகரித்துள்ளது  என்று இந்த புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது. 

தமிழகத்தை மகாராஷ்டிரா, குஜராத், கேரளா போன்ற எந்த மாநிலத்தோடும் ஒப்பிடவும் விரும்பவில்லை. அளவிலும், மக்கள் தொகை அளவிலும் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது ரூ.5லட்சம் கோடிக்கும் அதிகமான கடனோடு இருந்தது. ஆனால் அதன்பின் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதிநிர்வாகம், தமிழகஅரசின் கட்டுக்கோப்பான நிர்வாகம்தான் பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முக்கியக் காரணம்.
இதுவரை எந்த நிதிஅமைச்சரும் செய்யாத பணியை பிடிஆர் செய்தார். அதாவது எங்கெல்லாம் நிதி முடங்கி இருந்ததோ அங்கெல்லாம் பணத்தை வெளிக்கொண்டுவந்து, பட்ஜெட்டை தாக்கல் செய்து சமாளித்தார். 

தமிழக அரசு செய்து வரும் பல்வேறு சமூக நலத்திட்டங்களால் மக்களின் வாழ்க்கைத் தரம், சேமிப்பு அதிகரிக்கிறது , செலிவிடும் திறன் அதிகரிக்கிறது. மத்திய அரசின் மோசமான நிதிநிர்வாகத்துக்கு மீறி தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கினால், தமிழகத்தில் பணவீக்கம் 5 சதவீதத்துக்கும் கீழ் குறையும். 

பெட்ரோலில் லிட்டருக்கு வாட் வரியில் 3 ரூபாயை தமிழக அரசு குறைத்தது, நிதி நிர்வாகத்தில் ஒரு ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தது. எனக்குத் தெரிந்து அடுத்த 3 ஆண்டுக்குள் வருவாய், நிதிப்பற்றாக்குறையை பெருமளவு குறைக்கும் என்று நம்புகிறேன். 

பணவீக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டதற்கும், விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டதற்கும் சிறந்த நிர்வாகம், சமூக நலத்திட்டங்களின் பலன்கள் கடைசிநபர்வரை சேர்வதை உறுதி செய்திருக்கிறார்கள். குஜராத் மாடல் தோல்வி அடைந்தது. ” எனத் தெரிவித்தார்
 

click me!