rbi: 2000 rupee note: ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து தொடர்ந்து குறைப்பு: காரணம் என்ன? புதிய தகவல்கள்

By Pothy RajFirst Published May 28, 2022, 10:48 AM IST
Highlights

rbi : 2000 rupee note : 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்திலிருந்து குறைக்கப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில் புழக்கத்திலிருந்து 214 கோடி ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
இதனால் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்புக்கு நாடு தயாராகிறதா அல்லது 2 ஆயிரம் நோட்டுகளை மட்டும் புழக்கத்திலிருந்து நீக்க திட்டமா என்பது குழப்பமாக இருந்து வருகிறது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்திலிருந்து குறைக்கப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில் புழக்கத்திலிருந்து 214 கோடி ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதனால் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்புக்கு நாடு தயாராகிறதா அல்லது 2 ஆயிரம் நோட்டுகளை மட்டும் புழக்கத்திலிருந்து நீக்க திட்டமா என்பது குழப்பமாக இருந்து வருகிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின் புதிதாக அச்சடிப்பதையே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்ட நிலையில், தொடர்ந்து அந்த குறி்ப்பிட்ட மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்திலிருந்து குறைந்து வருகிறது சந்தேகங்களை எழுப்புகிறது. 

ரூ.10ஆயிரம் நோட்டு

இந்தியாவில் கடந்த 1938ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. இதுதான் இந்தியாவின் அதிகபட்ச மதிப்புள்ள ரூபாய் நோட்டாகும். அதன்பின் அந்த நோட்டு 1946ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. 

அதன் நாடு சுதந்திரம் அடைந்தபின் 1954ம் ஆண்டு புதிதாக 10,000 ரூபாய் நோட்டு, 5,000ரூபாய் நோட்டு, 1,000 ரூாபய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த நோட்டுகளும், 1978ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் ஆட்சியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது.

ரூ.1000 நோட்டு இல்லை

அதன்பின் நாட்டில் அதிகபட்ச கரன்ஸியாக ரூ.1000 நோட்டு மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்தபின் ரூ.1000 நோட்டுகளும் ஒழிக்கப்பட்டு, புதிதாக கரன்ஸிக்கள் வெளியிடப்பட்டன. 

புதிய நோட்டுகள்

பணமதிப்பிழப்புக்குப்பின் 1000 நோட்டு நீக்கப்பட்டு 2ஆயிரம் நோட்டை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பல வண்ணங்களில் ரூ.500, ரூ.100, ரூ.200, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரூ.2ஆயிரம் நோட்டு புழக்கம்

2017ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 328.50 கோடி(எண்ணிக்கையில்) 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அடுத்தடுத்து படிப்படியாக 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து குறைந்து வருகிறது.

புழக்கம் குறைவு

 2018 மார்ச் முடிவில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில், 18,037 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது, இதில் 37.3 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எனத் தெரிவித்தது. ஆனால், 2017ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ.2ஆயிரம் எண்ணி்க்கை அளவு 50 சதவீதத்திலிருந்து 37.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.2ஆயிரம் எண்ணிக்கை அளவு 37.30 சதவீதத்திலிருந்து 22.6 சதவீதமாகக் குறைந்தது.

2.4 சதவீதமாகக் குறைப்பு

2018ம் ஆண்டு மார்ச் முடிவில் ரூ.2ஆயிரம் நோட்டு எண்ணிக்கை 33,632 லட்சம் எண்ணிக்கையிலிருந்து 2020ம் ஆண்டு மார்ச் முடிவில் 27 லட்சத்து 398 ஆகக் குறைந்தது. 2020ம் ஆண்டு மார்ச் முடிவில் ரூ.2ஆயிரம் நோட்டு எண்ணிக்கை ஒட்டுமொத்த ரூபாய் எண்ணிக்கையில் 2.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதாவது, 274 கோடி தாள்கள் மட்டுமே இருந்தன.
இது 2018ம் ஆண்டு மார்ச் மாத முடிவில் 3.3. சதவீதமாக இருந்தது.

1.6 சதவீதம் 

மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 37.3 சதவீதம் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டு, 2020 மார்ச் முடிவில் 22.6 சதவீதமாகக் குறைந்தது. 2017ம் ஆண்டு ஏறக்குறைய 50 சதவீதம் ரூ.2ஆயிரம் நோட்டுகள் இருந்தது. 

ஆனால் இந்த எண்ணிக்கை 2021 மார்ச் மாதம் மேலும் 2 சதவீதம் குறைந்து, 245 கோடி  ரூ.2ஆயிரம் நோட்டு தாள்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. கடந்த நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் நோட்டு எண்ணிக்கை முந்தைய நிதியாண்டைவிட மேலும் குறைந்து, 214 கோடி ரூ.2ஆயிரம் தாள்கள் மட்டுமே இருந்துள்ளது. இது ஒட்டுமொத்த அனைத்து ரூபாய் எண்ணிக்கையிலும் 1.6 சதவீதம்தான். 

கடந்த 2017ம் ஆண்டில் ஒட்டுமொத்த ரூபாய் நோட்டு புழக்கத்தின் மதிப்பிலும் 50 சதவீதம் இருந்த ரூ.2ஆயிரம் நோட்டு, 2021-22ம்ஆண்டில் வெறும் 1.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

படிப்படியாகக் குறைப்பு

மதிப்பின் அடிப்படையில், ஒட்டுமொத்த பணப்புழக்கத்தில் ரூ.2ஆயிரம் நோட்டு எண்ணி்க்கை 22.60 சதவீதமாக இருந்தது, 2021ம் ஆண்டு மார்ச் முடிவில் 17.30 சதவீதமாகக் குறைந்தது. இது மேலும் குறைந்து 2022 மார்ச் மாத முடிவில், 13.80 சதவீதமாகக் ரூ.2ஆயிரம் நோட்டு மதிப்பு குறைந்துள்ளது.

மறைமுக பணமதிப்பிழப்பா

ரூ2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக புழக்கத்திலிருந்து குறைப்படுவதன் மூலம் ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பு செய்யாமல் அந்த நோட்டுகளை மட்டும் குறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின் ரிசர்வ் வங்கியிலிருந்து புதிதாக எந்த ரூ2ஆயிரம் நோட்டுகளும் வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை. 

அச்சடிப்பது நிறுத்தம்

2019ம் ஆண்டு மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி “ 2019ம் ஆண்டிலிருந்து ரூ.2ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

பதுக்கல், கறுப்புபணம்

ஆதலால், மக்கள் புழக்கத்திலிருந்து ரூ.2ஆயிரம் நோட்டுகளை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ மதிப்பின் அடிப்பையில் உயர்வாக இருப்பதால் பதுக்கலுக்கு வாய்ப்பாகவும், கறுப்புப் பணமாக மாற்றவும், வரி ஏய்ப்பு செய்யவும் வசதியாகவும் ரூ.2ஆயிரம் நோட்டு இருக்கிறது. 

அதனால்தான் 2ஆயிரம் நோட்டுகளை புதிதாக ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏடிஎம்களில் இருந்தும் 2ஆயிரம் நோட்டு வைப்பது ரத்து செய்யப்பட்டது, வங்கிகளுக்கு வரும் 2 ஆயிரம் நோட்டுகளையும் மக்கள் புழக்கத்துக்கு தருவதும் குறைக்கப்பட்டுள்ளது”எனத் தெரிவித்துள்ளனர்.

கள்ளநோட்டுகள்

இது தவிர ரூ.2ஆயிரம் நோட்டுகளைப் போல் கள்ள நோட்டுகள் அச்சடிப்பதும், அதுபிடிபடுவதும் அதிகரித்துள்ளது. ரூ.2ஆயிரம் நோட்டுகள் வெளியிட்டபின் கள்ளநோட்டுகள் பிடிபட்ட அளவும் அதிகரித்தது. 2017ம் ஆண்டு என்சிஆர்பி புள்ளிவிவரத்தின்படி, கள்ள நோட்டுகள் பிடிபட்டதில் 53.5 சதவீதம் ரூ.2ஆயிரம் நோட்டுகள் எனத் தெரிவித்தது. 

இது 2018ம் ஆண்டில் மதிப்பின் அடிப்படையி்ல் ரூ.2ஆயிரம் நோட்டு 61.1 சதவீதமாக அதிகரித்தது. 2017 முதல் 2018ம் ஆண்டுவரை வங்கிகள் மூலம் பிடிபட்ட ரூ.2ஆயிரம் கள்ளநோட்டு எண்ணிக்கை அளவு21.9 சதவீதம் அதிகரித்திருந்தது. 
இதன்பின்புதான் ரூ2ஆயிரம் நோட்டு எண்ணிக்கையை புழக்கத்திலிருந்து படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 

புள்ளிவிவரம்

 ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தின்படி, 2019-20ம் ஆண்டில் 2 கோடியே 96 லட்சத்து 695 எண்ணிக்கையில் தாள்கள் கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளன. இதில் ரூ.2ஆயிரம் நோட்டுகள் மட்டும் 17ஆயிரத்து20 தாள்கள் பிடிபட்டுள்ளன. இது 2018-19ம் ஆண்டில் 21 ஆயிரத்து 847ஆக இருந்தது என்று தெரிவித்துள்ளது.

சட்டவிரோத செயல்கள்

பொருளாதார வல்லுநர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் ஆகியோரும் பொருளாதாரத்துக்கு ரூ.2ஆயிரம் நோட்டு சரிவராது. கறுப்புப்பணம், பதுக்கல், தீவிரவாத செயல்கள் போன்ற பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்திருந்தனர்.

கேள்வி

தீவிரவாத செயல்கள், கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காகவே பணமதிப்பிழப்பை கொண்டுவந்ததாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், ரூ.2ஆயிரம் போன்ற உயர் மதிப்புள்ள நோட்டுகளை அறிமுகப்படுத்தியது எந்தவிதத்தில் நியாயமாகும். எதற்காக பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டதோ அதன் தாத்பரியத்தையே ரூ.2ஆயிரம் நோட்டு அறிமுகம் நீக்கிவிடும் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, சத்தமில்லாமல் ரூ.2ஆயிரம் நோட்டுகள் புழக்கத்திலிருந்து குறைக்கப்பட்டு வருகின்றன. வெளிப்படையாக ரூ.2ஆயிரம் மட்டும் மதிப்பிழப்பு என்று கூறினால் மக்கள் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பை தாங்கமாட்டார்கள் என்பதால் மறைமுகமாக ரிசர்வ் வங்கி மூலம் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்படுவது என்பது டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருவதையே காட்டுகிறது என்று பொருளாதார வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதர வல்லுநரும், முன்னாள் வருமானவரித்துறை அதிகாரியுமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்துக்கு பேட்டியளித்தார். 

அவரிடம் ரூ.2ஆயிரம் நோட்டுகள் புழக்கத்திலிருந்து குறைக்கப்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 
அதற்கு அவர் அளித்த பதில்: 

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்துவருவதுதான் உயர்மதிப்பிலான கரன்ஸிகள் எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கான காரணம். பொருளாதாரத்தில் ரூ.50, 100 ரூபாய் புழக்கம் குறைந்திருக்கிறது என்றால் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்று அர்த்தம். ஆனால் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் எண்ணிக்கை குறைந்துவருகிறது என்றால் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருவதையே காட்டுகிறது.

அதிலும் கொரோனா காலத்துக்குப்பின் டிஜிட்டல் பொருளாதாரம் என்பது பெரிய அளவில்வளர்ச்சி கண்டுள்ளது. மக்களில் பெரும்பகுதியினர் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு மாற கொரோனா சூழல் தள்ளிவிட்டது. மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பழக்கப்பட்டுவிட்டனர். மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துவருவதாலும், நகர்த்தவேண்டும் என்பதாலுமே உயர் மதிப்புள்ள கரன்ஸிகள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது

கள்ள நோட்டுகள் பிடிப்பட்டது அதிகரித்ததால்தான் ரூ.2ஆயிரம் நோட்டு புழக்கம் குறைக்கப்பட்டதா

இல்லை, கள்ளநோட்டுகள் பிடிபட்டதற்கும், ரூ.2ஆயிரம் நோட்டு எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கும் தொடர்பு இல்லை. ஒரு காரணமாக இருக்கலாமே தவிர அதுவே காரணமாகவும் இல்லை. உயர்மதிப்பு அதிகம் கொண்ட ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறைகிறது என்றாலே டிஜிட்டல் பொருளாதாரம் வளர்கிறது என்றுதான் அர்த்தம். இன்று மக்கள் சிறிய செலவுகளுக்கு மட்டும்தான் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துகிறார்கள் மற்றவற்றில் பெரும்பாலும் டிஜிட்டல் ரீதியாக பணத்தை பரிமாற்றம் செய்யவே விரும்புகிறார்கள். ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது முதல், பேமெண்ட் ஆப்ஸில் பணம் அனுப்புவதுவரை டிஜிட்டல் மயமாகிவிட்டது. 

டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியாவில் வெற்றியஅடைந்துவிட்டதா

நிச்சயமாக வேறு எந்தநாட்டைவிடவும், இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் வெற்றி பெற்று இருக்கிறது. இன்று சாதாரண கடைகள் மூலம் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை மக்கள் ரொக்கமாக பணம் கொடுக்கும் அளவுக்கு ஏற்பட போன்பே, கூகுள்பே போன்றவற்றிலும் பணத்தை பரிமாற்றம் செய்கிறார்கள். ஆதலால், வேறு எந்த நாட்டைவிடவும் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் வெற்றி பெற்றுள்ளது. பொருளாதாரத்தில் உயர் மதிப்பு கரன்ஸிகள் குறைகிறது என்றாலே மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறார்கள் என்று அர்த்தம். மற்ற காரணிகளும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர அது பிராதனமானது அல்ல

இவ்வாறு பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்

click me!