
தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தைகள் புனித ரமலான் பண்டிகையையொட்டி இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளன.
கமாடிட்டி மார்க்கெட் அதாவது உலோகம் மற்றும் புல்லியன் மார்க்கெட்டும் இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அந்நியச் செலாவணிச் சந்தை மற்றும் கமாடிட்டி ப்யூச்சர் மார்க்கெட்டுக்கும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் முடிவில் 84 புள்ளிகள் குறைந்து, 56,975 புள்ளிகளில் சரிவுடன் முடிந்தது. அதேபோல தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 33.40 புள்ளிகள் குறைந்து, 17,069 புள்ளிகளில் நிலை பெற்றது.
பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல்தான் இந்த வாரம் நீடிக்கும்என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர். அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் இந்த வாரத்தில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கடனுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரி்க்கையுடனே வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள். இதேபோல பிரிட்டனின் பேங்க் ஆப் இங்கிலாந்தும் பணவீக்கத்தைக் குறைக்க வட்டிவீதத்தை அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் இந்த வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களுமே பங்குச்சந்தையில் ஊசலாட்டம் நிலவும் எனத் தெரிகிறது.
இது தவிர எல்ஐசி ஐபிஓ நாளை நடக்கிறது. இந்த ஐபிஓ விற்பனை நாளை தொடங்கி வரும் 9ம் தேதிவரை நடக்கிறது. இதில் முதலீடு செய்ய ஏராளமான சில்லரை முதலீட்டாளர்கள், பாலிசிதாரர்கள் வருவார்கள் என்பதால், பங்குச்சந்தையில் ஊசலாட்டம் நிலவினாலும் பெரிதாக சரிவு இருக்காது.
தேசியப் பங்குச்சந்தை நிப்டியில் நேற்று அப்பலோ மருத்துவமனை, எய்ச்சர் மோட்டார்ஸ், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. இன்டஸ்இன்ட் வங்கி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஹெச்டிஎப்சி பங்குகள் லாபத்தில் முடிந்தன.
கரன்சி சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.76.51 ஆகச் சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி டாலருக்கு எதிராக ரூ.76.43 ஆக இருந்த நிலையில் 9 காசுகள் சரிந்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.