இந்தியாவை தொடர்ந்து பிரிட்டன் - வேற  லெவல் வேகத்தில் ஓலா எலெக்ட்ரிக்!

By Kevin KaarkiFirst Published Jan 29, 2022, 12:50 PM IST
Highlights

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பிரிட்டனில் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சர்வதேச சந்தையில் கால்பதிக்கும் நோக்கில் ஓலா ஃபியூச்சர்-ஃபவுண்ட்ரி ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை கட்டமைக்க இருக்கிறது. இந்த ஆய்வு மையம் ரூ. 1400 கோடி மதிப்பில் பிரிட்டனில் கட்டமைக்கப்பட இருக்கிறது. இந்த மையத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின்  எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்களின் டிசைன் மற்றும் பொறியியல் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

ஃபியூச்சர்-ஃபவுண்டரி மையத்தில் உள்ள குழுவினர் பெங்களூரு மைய குழுவுடன் இணைந்து பணியாற்றுவர். இந்த திட்டத்திற்கென ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முதற்கட்டமாக ரூ. 750 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. இந்த நிதி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல கட்டங்களாக வழங்கப்பட இருக்கிறது.

வாகனங்களுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகள் மட்டுமின்றி, இதே மையத்தில் பேட்டரி  செல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதன் மூலம் உற்பத்தி செலவீனங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஃபியூச்சர்-ஃபவுண்டரியில் 200 டிசைனர்கள் மற்றும் பொறியாளர்களை பணியில் அமர்த்த ஓலா எலெக்ட்ரிக் முடிவு செய்து இருக்கிறது. 

கடந்த ஆண்டு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவை எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

click me!