முன்பதிவில் புது மைல்கல் கடந்த மஹிந்திரா XUV700 - ஆனாலும் இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமா?

By Kevin KaarkiFirst Published Jan 29, 2022, 11:41 AM IST
Highlights

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV700 மாடலின் காத்திருப்பு காலம் இதுவரை இல்லாத அளவு மேலும் அதிகரித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடலுக்கான முதல் 14 ஆயிரம் பில்லிங்கை நிறைவு செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாகவும் மஹிந்திரா அறிவித்துள்ளது. அமோக வரவேற்பு மற்றும் சிப்செட் குறைபாடு காரணமாக இந்த எஸ்.யு.வி. மாடலுக்கான காத்திருப்பு காலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை நீண்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி முதல் மஹிந்திரா தனது XUV700 மாடலின் வினியோகத்தை துவங்கியது. இதன் டீசல் வேரியண்ட்கள் நவம்பர் மாத இறுதியில் வினியோகம் செய்யப்பட துவங்கின. புதிய XUV700 மாடலுக்கான முன்பதிவு 2021 அக்டோபர் 7 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு துவங்கிய இரண்டே நாட்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிய XUV700 வாங்க முன்பதிவு செய்தனர். 

இதன் பின் மேலும் 35 ஆயிரம் முன்பதிவுகளை மஹிந்திரா XUV700 பெற்றது. இதுவரை சில ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 86 ஆயிரம் பேருக்கு புதிய XUV700 விரைவில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மஹிந்திரா XUV700 மாடலுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு மற்றும் சர்வதேச சந்தையில் செமிகண்டக்டருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக XUV700 AX7 வேரியண்டிற்கான காத்திருப்பு காலம் 84 வாரங்களாக அதிகரித்து இருக்கிறது. 

அடிரினோ எக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பெற்று இருக்கும் மற்ற வேரியண்ட்களான- AX3, AX5 மற்றும் AX7 உள்ளிட்ட வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் எட்டு மாதங்களாக அதிகரித்துள்ளது. எண்ட்ரி லெவல் MX மாடலுக்கான காத்திருப்பு காலம் ஏழு மாதங்களாக இருக்கிறது. இன்றில் இருந்து கணக்கிடும் பட்சத்தில் XUV700 அடுத்தக்கட்ட யூனிட்கள் தீபாவளி பண்டிகை காலக்கட்டத்தில் வினியோகம் செய்யப்படலாம்.

மஹிந்திரா XUV700 மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர், எம்-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் டீசல் என்ஜின் ஆப்ஷனல் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடனும் வழங்கப்படுகிறது. தற்போதைய முன்பதிவுகளில் 35 சதவீத யூனிட்கள் பெட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் ஆகும்.

புதிய மஹிந்திரா  XUV700 மாடலின் விலை ரூ. 12.96 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 23.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா XUV700 மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹேரியர் மற்றும்  எம்.ஜி. ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

click me!