naveen jindal bjp: பாஜக தலைவர்கள் முதிர்ச்சியற்ற பேச்சு: இந்தியா-வளைகுடா நாடுகள் வர்த்தகம் பாதிக்குமா?

Published : Jun 07, 2022, 03:15 PM ISTUpdated : Jun 07, 2022, 11:31 PM IST
naveen jindal bjp:  பாஜக தலைவர்கள் முதிர்ச்சியற்ற பேச்சு: இந்தியா-வளைகுடா நாடுகள்  வர்த்தகம் பாதிக்குமா?

சுருக்கம்

nupur sharma and naveen jindal :இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்களின் முதிர்ச்சியற்ற, சர்ச்சைக்குரிய கருத்தால் வளைகுடா நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக உறவு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்களின் முதிர்ச்சியற்ற, சர்ச்சைக்குரிய கருத்தால் வளைகுடா நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக உறவு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவதூறு

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபுல் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் இருவரையும் சஸ்பெண்ட் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டது. 

இந்த விவகாரத்தால் அதிருப்தியும், வேதனையும் அடைந்த முஸ்லிம் நாடுகள் இந்தியத் தூதர்களை அழைத்து கண்டனத்தையும், அதிருப்தியையும் பதிவு செய்தன. கத்தார், ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் நாடுகள் இந்தியத் தூதர்களுக்கு கண்டனம் தெரிவித்தன. 

இந்தியப் பொருட்கள் புறக்கணிப்பு

 இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்கவும் வளைகுடா நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் ஓமன் நாட்டு அரசின் மதகுரு வெளிப்படையாகவே இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.  

பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபுல் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் இருவரின் முதிர்ச்சியற்ற பேச்சால் வளைகுடா நாடுகள், இந்தியா இடையிலான அரை நூற்றாண்டுக்கும் அதிகமான  உறவு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கண்டனம்

சவுதி அரேபியா, லிபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, குவைத், கத்தார், பஹ்ரைன், ஏமன், ஈரான்,, ஓமன் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள், பாஜக தலைவர்கள் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளன. 

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும்(ஓஐசி) பாஜக தலைவர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  ஆனால், இந்த விவகாரத்தில் பட்டும்படாதது போல் இருக்கும் பாஜக கட்சி, அந்தக் கருத்து தங்களுடையது அல்ல, மத்திய அரசின் கருத்தும் அல்ல, அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று ஒதுங்கிக்கொண்டு, இருவரையும் சஸ்பெண்ட் செய்தது.

மேற்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவுக்கு நீண்டகாலமாக வர்த்தக உறவு இருந்து வருகிறது. பாஜக தலைவர்கள் சிலரின் சர்ச்சைக்குரிய கருத்தால் காலம்காலமாக பேணிக் காத்த இந்தியா, வளைகுடா நாடுகளுக்கு இடையிலான நட்புறவிலும், வர்த்தக உறவிலும் விரிசல் வந்துவிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தக உறவு

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார்,  ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய 6 நாடுகள் கொண்ட வளைகுடா கூட்டுறவு கவுன்சிலுக்கும் இந்திய அரசுக்கும் இடையே பொருளாதார கூட்டுறவு இருக்கிறது. இந்த நாடுகளுடன் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியா அதிகமாக ஈடுபட்டு வருகிறது

இந்தியாவின் ஏற்றுமதிகளில் 4-வது இடத்தில் இந்த 6 நாடுகளும் உள்ளன. வடஅமெரிக்கா, ஐரோப்பியயூனியன், வடக்கு கிழக்கு ஆசியாவுக்கு அடுத்தார்போல இந்த நாடுகளுடன் இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி

இந்தியாவின் ஏற்றுமதி ஒருபக்கம் இருக்க, இந்த 6  நாடுகளைச் சார்ந்தும் இந்தியாவின் நிலை இருக்கிறது. இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு இ்ந்த 6 நாடுகளையே இந்தியா பெரிதும் நம்பி இருக்கிறது. மேற்கு ஆசியாவில் இருந்து இறக்குசெய்யப்படுவதில் மூன்றில் இரு பங்கு  பெட்ரோலி பொருட்கள்தான்.  இந்தியாவின் இறக்குமதியில் 30 சதவீதம் பெட்ரோலியப் பொருட்கள்தான் இருக்கிறது. சவுதி அரேபியா 18 சதவீதத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 10 சதவீதத்தையும் இந்திய இறக்குமதியில் பங்களிப்பு செய்கின்றன

ஐக்கிய அரபு அமீரகம் நாடு நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய ஏற்றுமதி நாடாகவும், இறக்குமதியிலும் 2-வதாகவும் இருக்கிறது. அமெரி்க்கா, சீனாவுக்கு அடுத்தார்போல் ஐக்கிய அரபு அமீரகத்துடன்தான் இந்தியா அதிகமாக வர்த்தகம் செய்து வருகிறது.

சவுதிஅரேபியா

 கடந்த நிதியாண்டில் இந்தியாவுடன் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் சவுதி அரேபியா 4-வது இடத்தில் இருந்தது, நடப்பு நிதியாண்டில் 2-வது இடத்தில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம்தான் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையிலான முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.

வளைகுடா நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்தும் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார்,  ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய ஜிசிசி நாடுகளுக்கு மட்டும் 439.30 கோடி டாலருக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. 

இது முந்தைய ஆண்டைவிட 58சதவீதம் அதிகம். இறக்குமதியைப் பொறுத்தவரை 1107.72கோடி டாலருக்கு இறக்குமதி நடந்துள்ளது இதில் இறக்குமதி 86 சதவீதம் அதிகரித்துள்ளது

ஏற்றுமதி இறக்குமதி

இந்தியாவிலிருந்து பருப்பு வகைகள், மின் சாதனங்கள், ஆடைகள், எந்திரங்கள் அதிக அளவில் ஜிசிசி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அங்கிருந்து பெட்ரோலியப் பொருட்கள், விலை உயர்ந்த கற்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதியாகின்றன

இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்துள்ளது. ஜிசிசி நாடுகளில் இந்தியாவின் முதலீடும் கனிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல வளைகுடா நாடுகளில் இருக்கும் பல முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய சிறந்த நாடாகவும் இந்தியா இருக்கிறது. ஆதலால், பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடரும் பட்சத்தில் நட்புறவு மட்டுமின்றி, வர்த்தக உறவும் பாதிக்கப்படும்.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!