
பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் வரும் 20ம் தேதி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தது, அந்தத் திட்டங்களுக்கு கடன் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது, திட்டங்களின் செயல்பாடு, வளர்ச்சி ஆகியவை குறித்து வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தபின் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திக்கும்முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.
ரஷ்யா-உக்ரைன் போரால் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்திருக்கும் நிலையில், வளர்ச்சியை வேகப்படுத்த, உற்பத்தி துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு வங்கிகள் விரைவாக கடன் வழங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மத்திய நிதிஅமைச்சகம் சார்பில் ஒரு வார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற வங்கிகள், தகுதிவாய்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள், தொழில்முனைவோர்களுக்கு உடனடியாக கடன் வழங்கி உத்தரவு பிறப்பித்தன.
வரும் 20ம் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் “வங்கிகள் அளிக்கும் கடனுதவி எவ்வாறு வளர்ந்துள்ளது, வாராக்கடன் நிலைமை, கிஷான் கடன் அட்டை வினியோகம், அவசரகால கடன்உதவி உறுதியளிப்புத் திட்டம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அவசரகாலகடனுதவி திட்டம் 2023 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் கோடி ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபமும் இரு மடங்காகி ரூ.66,539 கோடியாக அதிகரித்துள்ளது. 12 பொதுத்துறை வங்கிகளின் லாபம் ஒட்டுமொத்தமாக ரூ.31,820 கோடியாக இருக்கிறது. தொடர்ந்து 2015 முதல் 2020ம் ஆண்டுவரை வங்கிகள் இழப்பைச் சந்தித்த நிலையில் இந்த லாபத்தை அடைந்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 2017-18ம் ஆண்டில் ரூ.85,370 கோடி இழப்பை பொதுத்துறை வங்கிகள் சந்தித்தன. ஆனால் அதிலிருந்து மீண்டு தற்போது லாபத்தில் செல்கின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.