Naveen Jindal : பாஜக தலைவர்கள் சர்ச்சை பேச்சு: இந்தியப் பொருட்களை புறக்கணிக்க ஓமன் மதகுரு அழைப்பு..!

By Pothy RajFirst Published Jun 6, 2022, 7:56 AM IST
Highlights

naveen jindal nupur sharma: remarks against Prophet Mohammad; Oman calls for boycott of Indian products: இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகள் இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளன. சில நாடுகள் இந்தியத் தூதருக்கு சம்மன் அனுப்பி அதிருப்தியை தெரிவித்துள்ளன.

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகள் இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளன. சில நாடுகள் இந்தியத் தூதருக்கு சம்மன் அனுப்பி அதிருப்தியை தெரிவித்துள்ளன.

இதில் ஓமன் மதகுரு வெளிப்படையாகவே இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக் கருதது

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த நுபுல் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் இருவரையும் சஸ்பெண்ட் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டது. இருவரும் ஒரு சேனலில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சர்ச்சைக்குரிய வகையில்  பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார் அரசு கண்டனம்

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம், தோஹாவில் உள்ள இந்தியத் துணைத்தூதரைஅழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் அவதூறு பேசுவது குறித்து கத்தார் அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதற்கு கத்தாரில் உள்ள இந்தியத்தூதர் தீபக் மிட்டல் ட்விட்டரில் விடுத்த அறிக்கையில் “ ட்விட்டரில் முஸ்லிம்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தெரிவிக்கும் கருத்துக்கள் மத்திய அரசின் கருத்துக்கள் அல்ல. இது பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளின் கருத்து. எங்கள் பாரம்பரிய நாகரீகம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலிமையான கலாச்சாரம்,  அனைத்து மதங்களுக்கும் உயர்ந்த சமமான மதிப்பை இந்திய  அரசு வழங்குகிறது. இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார்

குவைத் அரசு சம்மன்

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து, குவைத் அரசு, இந்தியத்தூதருக்கு சம்மன் அனுப்பி தங்களின் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளது. அதேநேரம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை வரவேற்றுள்ளது.

இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள்

ஓமனில் உள்ள உயர்மதகுரு ஓமன் ஷேக் அல் காலிலி விடுத்த செய்தியில், “ இறைத்தூதர் குறித்து அவதூறு பேசிய இந்தியர்களின் பொருட்களை புறக்கணியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். சவுதிஅரேபியா, குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பெரும்பாலான கடைகளில் இந்தியப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தநிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ஈரான் அதிருப்தி

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முதல்முறையாக அடுத்தவாரம் இந்தியாவுக்கு வர இருக்கும் நிலையில் இந்தியத்தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இறைத்தூதர் குறித்து அவதூறு பேசிய பாஜக தலைவர்கள் செயல்கள் குறித்து இந்தியத் தூதரிடம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வேதனையையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
இந்தியத் தூதர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “ இறைத்தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்தக் கருத்துகள் இ்ந்தியாவின் மனநிலையை பிரதிபலிக்காது. அனைத்து மதங்களையும் இந்திய அரசு சமமாக மதிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!