மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மார்க்கெட் கேப் முதன் முறையாக ரூ.400 லட்சம் கோடியை தாண்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது
ப்ளூ-சிப், மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் குறியீடுகள் தொடர்ந்து ஏற்றக் கண்டு வருவதால், மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் முதல் முறையாக இன்று ரூ. 400 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக மும்பை பங்கு சந்தையின் சந்தை மூலதனம் ரூ.100 லட்சம் கோடி எட்டியது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.200 லட்சம் கோடியை எட்டியது. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.300 லட்சம் கோடியை எட்டிய நிலையில், தற்போது ரூ. 400 லட்சம் கோடியைத் தாண்டி தனது வாழ்நாள் உச்சத்தை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 145 டிரில்லியன் சந்தை மூலதனத்தைப் பெற்றன. இது 57 சதவீதம் உயர்வைக் குறிக்கிறது. வலுவான கார்ப்பரேட் வருவாய், நிலையான கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்களிடம் ஏற்பட்ட நேர்மறையான உணர்வு மற்றும் குறிப்பிடத்தக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச வரவுகளால் இந்த வளர்ச்சி எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. லார்ஜ் கேப் சென்செக்ஸ் குறியீடு 28.6 சதவீதம் இருந்தபோது, மிட் கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் முறையே 60% மற்றும் 63% உயர்ந்து லார்ஜ் கேப்பை விஞ்சியது. வளர்ச்சியடைந்த முன்னணி துறைகளாக ரியாலிட்டி, பொதுத்துறை வங்கிகள், ஆட்டோ, எரிசக்தி, இன்ஃப்ரா மற்றும் பார்மா ஆகியவை உள்ளன.
மோதிலால் ஓஸ்வால் செக்யூரிட்டிஸ் கணிப்பின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2025-26ஆம் நிதியாண்டில் 4 டிரில்லியன் டாலரையும், 2034 நிதியாண்டுக்குள் 8 டிரில்லியன் டாலரையும் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கும் வகையில், உள்கட்டமைப்பு, கேபெக்ஸ் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்கு பொருளாதாரம் தயாராகிறது. எனவே, வலுவான வளர்ச்சித் திறனுடன், இந்தியாவின் மூலதனச் சந்தைகள் வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் எனவும் மோதிலால் ஓஸ்வால் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது.
மீண்டும் எலான் மஸ்க்கை முந்திய மார்க் ஜூக்கர்பெர்க்! 2020க்குப் பின் முதல் முறை!
கடந்த சில வர்த்தகங்களில் சந்தை புதிய உச்சத்தை அடைய தயாரானது. ஆனால், நிறுவனங்களின் குறியீடுகள் அதிகரிக்கவில்லை. கடந்த மூன்று அமர்வுகளில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.2500 கோடியை விற்றுள்ளனர். கடந்த இரண்டு அமர்வுகளில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டும் ரூ.4000 கோடியை விற்றுள்ளனர். இந்தியச் சந்தைகள் ஏப்ரல் 4 அன்று புதிய சாதனை உச்சத்தைத் தொட்டன, ஆனால் ஏப்ரல் 5 ஆம் தேதி சீராகவே இருந்தன. இது அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும் என பகுப்பாய்வாளர்கள் கணிக்கின்றனர். எனினும், உடனடியாக ஒரு கரெக்ஷன் நடக்கும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த சந்தைத் திருத்தத்தைத் தவிர்ப்பதற்கு வலுவான காலாண்டு முடிவுகள் தேவை எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.