
எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின்(LIC) 2021-22ம் நிதியாண்டுக்கான நிதிமுடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஏதாவது ஈவுத்தொகை வழங்கப்படுமா என்ற எதிர்ப்பார்பு நிலவுகிறது.
எல்ஐசி நிறுவனத்தின் நிர்வாக வாரியக்குழு இயக்குநர்கள் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது
2021-22 நிதியாண்டு முடிவுகள்
2021-22ம் நிதியாண்டு முடிந்தநிலையில், எல்ஐசி நிறுவனம் தணிக்கை செய்யப்பட்ட காலாண்டு முடிவுகளையும் நிதியாண்டு முடிவுகளையும் இன்று அறிவிக்கிறது. எல்ஐசி நிறுவனம் சார்பில் ஐபிஓ வெளியிடப்பட்டு, பங்குகளும் கடந்த 17ம் தேதி முதல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுவிட்டன. ஆனால், லிஸ்டிங் விலை, பங்கு நிர்ணயிக்கப்பட்டவிலையைவிட 8 சதவீதம் குறைத்தது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
எஸ்எஸ்இ தேசியப்பங்குசந்தையில் எல்ஐசி பங்கு ஒன்று ரூ.872க்கு அதாவது 8 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால் எல்ஐசி பங்கின் உண்மையான விலை ரூ.949 என நிர்ணயிக்கப்பட்டது.
மதிப்பு குறைவு
எல்ஐசி பங்குகள் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்ட நிலையில் ரூ.5.57 லட்சம் கோடியாகக் குறைந்தது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு வாங்கினால் லாபம்கிடைக்கும் என்று எண்ணி வாங்கியவர்கள் நிலைமை தலையில் கைவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
அடுத்தடுத்து வரும் நாட்களில் எல்ஐசி பங்குகள் மீது லாபம் கிடைக்கும், நீண்ட காலநோக்கில் லாபம் ஈட்டலாம் யாரும் அவசரப்பட்ட விற்கவேண்டாம் என்று அரசு தரப்பில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
ஏமாற்றம்
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் எல்ஐசி முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரூ.6 லட்சத்து 242 கோடியாக இருந்த எல்ஐசி பங்கு மதிப்பு, ரூ.42 ஆயிரத்து 500 கோடி குறைந்து, ரூ.5 லட்சத்து 57ஆயிரத்து 675 கோடியாகக் குறைந்தது.
வெள்ளிக்கிழமை(நேற்று) வர்த்தகம் முடிவில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் சரிந்து ரூ.5 லட்சத்து 19ஆயிரத்து 630 கோடியாகக் குறைந்தது. அதாவது, எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.80ஆயிரத்து 600 கோடி குறைந்தது. ஏறக்குறைய முதலீட்டாளர்களுக்கு ரூ.80ஆயிரத்துக்கும் அதிகமான கோடி இழப்பு ஏற்பட்டது. தள்ளுபடி செய்து லிஸ்டிங் செய்யப்பட்டதால் ரூ.38ஆயிரத்து 45 கோடியும் இழப்பு ஏற்பட்டது.
எதிர்பார்ப்பு
வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் எல்ஐசி பங்கு ரூ.821.55 என்ற விலையில் ஐபிஓ விலையைவிட 13.5 சதவீதம் குறைந்து விற்பனையானது. லிஸ்டிங் விலையை விட 5.2 சதவீதம் குறைந்தது. எல்ஐசி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதிகபட்சமாக பங்குவிலை ரூ.920 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.801.55 ஆகவும் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதலால் எல்ஐசி நிறுவனத்தின் 2021-22 ஆண்டு முடிவுகளையும், ஈவுத்தொகை அறிவிப்பையும் பங்குதாரர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.