
2021-22ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் குறைந்து ரூ.2,371.55 ஆக குறைந்துள்ளது. எல்ஐசி பங்கு முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-21ம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம், ரூ.2,893 கோடியாகஇருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டின் கடைசிக்காலாண்டான 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதத்தில் 18 சதவீதம் குறைந்து, ரூ2,371.55 கோடியாகக் குறைந்திருக்கிறது.
ஆனால், கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டு லாபத்தை மட்டும் வைத்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் மதிப்பிடக்கூடாது. கடந்த நிதியாண்டு முழுவதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றுஎல்ஐசி விளக்கம் அளித்துள்ளது.
அந்த வகையில் பார்த்தால் கடந்த2021-22ம் நிதியாண்டில், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.4,043 கோடியாகும். இது கடந்த 2020-21ம் நிதியாண்டைவிட, 39 சதவீதம் அதிகமாகும், அந்த நிதியாண்டில் ரூ.2,900 கோடிதான் நிகர லாபம்இருந்தது.
கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் எல்ஐசியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2லட்சத்து 11 ஆயிரத்து 471 கோடியாகும். இது கடந்த 2020-21 நிதியாண்டின் கடைசிக் காலாண்டைவிட, 11.64 சதவீதம் அதிகம், அப்போது, ரூ.ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 176 கோடிதான் வருவாய் இருந்தது.
எல்ஐசி நிறுவனம் சமீபத்தில் 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்தது. அந்தப் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக ரூ.1.50 பைசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டப்பின் வெளியாகும் முதல் காலாண்டு முடிவாகும். இதன்படி முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.10 முக மதிப்பில் ரூ.1.50 பைசா ஈவுத்தொகை வழங்கப்படும் என பங்குச்சந்தையில் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021-22ம் ஆண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு எல்ஐசி சார்பில் ரூ.916 கோடி வழங்கப்பட உள்ளது.
கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் ப்ரீமியம் தொகை முந்தைய ஆண்டின் கடைசிக் காலாண்டைவிட 18 சதவீதம் உயர்ந்து, ரூ.1.43 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் ரூ.1.21லட்சம் கோடியாகத்தான் இருந்தது.
2021-22ம் ஆண்டில் நிகர ப்ரீமியம் தொகை, ரூ.4.27 லட்சம் கோடியாகும். 2020-21ம் ஆண்டில் ப்ரீமியம் ரூ.4.02 லட்சம் கோடியாக இருந்தநிலையில் அதைவிட 6.21 சதவீதம் அதிகமாகும். பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் முடிவில் எல்ஐசி பங்கு விலை ரூ.837.05 ஆக இருந்தது. இது வெள்ளிக்கிழமை விலையைவிட 1.89 சதவீதம்குறைவாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.