
ஆஸ்த்ரியாவை சேர்ந்த கே.டி.எம். பிராண்டின் தாய் நிறுவனமான பைரெர் மொபிலிட்டி முழமையான எலெக்ட்ரிக் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. பேட்டரியால் இயங்கும் இந்த மோட்டார்சைக்கிள் கே.டி.எம். பிராண்டிங்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் அம்சங்கள் பெரும்பாலும் இ பைலென் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய எலெக்ட்ரிக் பைக் கே.டி.எம். பிராண்டு தற்போது விற்பனை செய்து வரும் நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் டியூக் மாடல்களை தழுவி உருவாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹஸ்க்வர்னா இ பைலென் மாடலில் உள்ள அம்சங்கள் கே.டி.எம். எலெக்ட்ரிக் மாடலிலும் வழங்கப்பட இருக்கிறது. இதுபற்றிய தகவல்களை பைரெர் மொபிலிட்டி உறுதிப்படுத்தி இருக்கிறது.
முன்னதாக 2021 ஆண்டுக்கான வருவாய் மற்றும் லாப விவரங்கள் அடங்கிய தரவுகளில் இருந்து இ டியூக் மாடல் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும் இந்த பைக் இ பைலென் மாடலை தழுவி உருவாக்கப்படும் என கூறப்பட்டது. இதில் 5.5 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி 10 கிலோவாட் திறன் வெளிப்படுத்தும்.
மேலும் இந்த மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் என எதிர்பார்க்கலாம். புதிதாக எலெக்ட்ரிக் சந்தையில் களமிறங்குவதால், அதிக செயல்திறன் மற்றும் குறைந்த விலையில் அறிமுகம் செய்து பெரும்பாலான சந்தைகளில் பெருவாரியான வாடிக்கையாளர்களை கே.டி.எம். பிராண்டு குறிவைக்கிறது.
இ பைலென் மற்றும் இ டியூக் மட்டுமின்றி இரண்டு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவதை பைரெர் மொபிலிட்டி உறுதிப்படுத்தி இருக்கிறது. இவை கே.டி.எம். E10 மற்றும் ஃபிரீரைடு E LV என அழைக்கப்படுகின்ற. இவற்றில் கே.டி.எம். E10 மாடல் இளைஞர்களுக்கான டர்ட் பைக் மாடல் ஆகும். ஃபிரீரைடு E LV ஸ்கிராம்ப்ளர் மாடல் ஆகும்.
இ பைலென் மற்றும் இ டியூக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபற்றி பைரெர் மொபிலிட்டி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஒருவேளை அறிமுகமாகும் பட்சத்தில் இவை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் உற்பத்தி செய்யப்படலாம். பஜாஜ் ஆட்டோ தனது ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கென ரூ. 300 கோடி முதலீடு செய்து இருக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.