ஐபிஎல் 2024 பைனலை முன்னிட்டு ஷாருக் கான், காவ்யா மாறன் இருவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியை ஒட்டி கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன் இருவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வைரலாகியுள்ளன.
இரு அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் துறையில் முன்னணியில் உள்ளனர். ஷாருக் பாலிவுட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். காவ்யா மாறனின் குடும்பம் மீடியா துறையில் முன்னணியில் உள்ளது. காவ்யாவின் தந்தை கலாநிதி மாறன் பெரிய ஊடக சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். இந்திய தொலைக்காட்சி துறையின் ராஜா என்று பெயர் பெற்றுள்ளார்.
ஆனால் சொத்துகளைப் பற்றிப் பார்க்கும்போது, காவ்யா மாறன் வசம் உள்ள சொத்துகள் ஷாருக்கின் சொத்துகளை விட 4 மடங்கு அதிகமாம்.
காவ்யா மாறன் யார்?
காவ்யா மாறன் ஆகஸ்ட் 1992இல் சென்னையில் பிறந்தார். பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தார். பின்னர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். பிறகு லண்டன் சென்று எம்பிஏ முடித்தார். காவ்யாவின் குடும்பம் அரசியலிலும் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது.
காவ்யாவின் தந்தை கலாநிதி மாறன் சன் குழுமத்தின் நிறுவனத் தலைவர். அரசியல் செல்வாக்கு மிக்க காவ்யாவின் குடும்பத்தில் பிரபல அரசியல்வாதிகளும் உள்ளனர். காவ்யாவின் தாத்தா முரசொலி மாறன், மாமா தயாநிதி மாறன் இருவரும் முன்னாள் மத்திய அமைச்சர்கள்.
கலாநிதி மாறனின் ஒரே மகள்தான் காவ்யா. போர்ப்ஸ் பட்டியலின்படி, இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் கலாநிதி மாறன் 82வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு சுமார் 24,000 கோடி ரூபாய் சொத்து உள்ளது. தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள், வார இதழ்கள், செயற்கைக்கோள் சேவைகள், தயாரிப்பு வசதிகள் போன்ற பல துறைகளில் வெற்றிகரமான பிராண்டுகளை உருவாக்கியுள்ளார். 2010 முதல் 2015 வரை ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸில் கணிசமான பங்குகளையும் கலாநிதி மாறன் வைத்திருந்தார்.
காவ்யா மாறனின் சொத்து மதிப்பு:
ஒரே மகள் என்பதால் தந்தை கலாநிதிக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் காவ்யாவுக்குதான். எனவே, காவ்யா மாறன் சுமார் 24,000 கோடிக்குச் சொந்தக்காரர் என்று சொல்லலாம். ஆனால் அவரிடம் உள்ள சொத்து சுமார் 4 கோடிதான். தனது தந்தையின் வணிக நிறுவனங்கள் மூலம் இந்த சொத்துகள் அவருக்கு வந்துள்ளன. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்தை காவ்யா மாறன் கவனிக்கிறார். சன் டிவி இ-காமர்ஸ் வணிகத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் நடந்தபோது காவ்யா மாறன் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். அவரது அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை 20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அந்த ஏலத்தில் மிகவும் உயர்ந்த விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் பாட் கம்மின்ஸ் தான்.
ஷாருக்கான் சொத்து:
பாலிவுட்டின் கிங் ஷாருக்கானும் சளைத்தவர் இல்லை. உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷாருக். ஷாருக் கானின் சொத்து மதிப்பு சுமார் 6000 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பல நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டவர். மும்பையில் ஒரு ஆடம்பரமான பங்களா வைத்திருக்கிறார். துபாய் மற்றும் லண்டனிலும் ஷாருக் கானுக்கு சொகுசு பங்களாக்கள் உள்ளன.