
வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடியின் ஃபயர்ஸ்டார் டைமண்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் வங்கிக் கணக்குகளில் ஒன்றில் ரூ.236 மட்டுமே மீதம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் நிர்வ் மோடியின் வைர வியாபார நிறுவனத்தை மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான நடைமுறைகளை கவனிக்க லிக்விடேட்டர் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். அதன்படி நிரவ் மோடியால் மோசடி செய்யப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு உரிய தொகையை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.
அண்மையில் கோடக் மஹிந்திரா வங்கி தங்களிடம் உள்ள நிரவ் மோடி நிறுவனத்தின் கணக்கில் இருந்து வருமான வரி பாக்கிக்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு 2.46 கோடி ரூபாயை அளித்துள்ளது. இதனையடுத்து அந்த வங்கியில் உள்ள ஃபயர்ஸ்டார் நிறுவனத்தின் கணக்கில் 236 ரூபாய் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகள் செலுத்த தொகை மொத்த நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை மட்டுமே.
இந்நிலையில் லிக்விடேட்டர் மிச்சம் உள்ள பணத்தை விடுவிக்கக் கோரி மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே கடந்த வாரம் இதே காரணத்துக்காக சிறப்பு நீதிமன்றத்தை நாடியபோது, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகள் தவறாமல் 3 மாதங்களுக்குள் உரிய தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
2019ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அதற்கு முன்பே 2018ஆம் ஆண்டில் மோசடிப் பேர்வழி நிரவ் மோடி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் இந்த வழக்கில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.