infosys : ukraine crisis: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ், ரஷ்யாவில் செயல்பட்டுவரும் தனது அலுவலகத்தை மூடிவிட்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ், ரஷ்யாவில் செயல்பட்டுவரும் தனது அலுவலகத்தை மூடிவிட்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
உக்ரைனுடன் போர்
ரஷ்யாவிலிருந்து வெளியேறி, அதற்குப்பதிலாக வேறு ஒரு வாய்ப்பை தேட இருப்பதாகவும் இன்போசிஸ் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனுடன் ரஷ்யா போர் செய்தபின், ஆரக்கிள், எஸ்ஏபி எஸ்இ ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் நிறுவனம் செயல்படுவதை நிறுத்திவிட்டன.
காலாண்டு வருவாய்
இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் மாத காலாண்டு முடிவுகள் நேற்று வெளியாகின அதில் இன்போசிஸ் வங்கியின் நிகர லாபம் ரூ.5,686 கோடியாகவும்,வருவாய் ரூ.32,276 கோடியாகவும் இருக்கிறது. 2021ம் ஆண்டு மார்ச் மாத காலாண்டு முடிவில், இன்போசிஸ் நிகர லாபம் ரூ.5,076 கோடியாகவும், வருவாய் ரூ.26,311 கோடியாகவும் இருந்தது. 2021, டிசம்பர் மாதத்தோடு முடிந்த காலிறுதியில் நிகர லாபம் ரூ.5,809 கோடியாகவும், வருவாய், ரூ.31,867 கோடியாகவும் இருந்தது.
ரஷ்யாவிலிருந்து வெளியேறுகிறோம்
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவு குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ ரஷ்யா உக்ரைன் இடையே என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ரஷ்யாவில் எங்கள் நிறுவனத்தின் அனைத்துப் பணிகள், செயல்பாடுகளை நிறுத்தி, அதை ரஷ்யாவுக்கு வெளியே கொண்டு வர இருக்கிறோம். ரஷ்யாவில் 100க்கும் குறைவான ஊழியர்கள்தான் பணியாற்றி வருகிறார்கள்.
ரஷ்யாவைச் சேர்ந்த எந்த வாடிக்கையாளருக்கும் நாங்கள் பணியாற்றவில்லை. ரஷ்யாவில் உள்ள சிறிய அளவிலான சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பணியாற்றுகிறோம். ரஷ்யாவிலிருந்து பணிகளை மாற்றுவதை தொடங்கிவிட்டோம்.இந்த நிலையில் எந்தவிதமான பாதிப்பும் எங்கள் நிறுவனத்துக்கு வராது” எனத் தெரிவித்தார்.
காரணம் என்ன?
இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் அக்ஸதா மூர்த்தி கூறுகையில் இந்தியாவிலும், பிரி்ட்டனிலும் தனக்குக் கிடைக்கும் வருமானத்துக்கான வரியைச் செலுத்துவேன்” எனத் தெரிவித்திருந்தார்
அக்ஸதாவின் கணவர் ரிஷி சுனக் பிரிட்டனின் நிதிஅமைச்சராக இருக்கிறார். தனது கணவருக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக அக்ஸதா தெரிவித்தார். சண்டே டைம்ஸ் நாளேடு வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியிலில் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பைவிட அக்ஸதா மூர்த்தியின் சொத்துமதிப்பு அதிகமாக இருந்தது.
பிரிட்டனில் குடியுரிமை பெறாதவர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதன்படி, அக்ஸதா வரி செலுத்தவில்லை. ஆனால், 20 மில்லியன் யூரோ வரை அக்ஸதா வரிஏய்ப்பு செய்திருக்கலாம் என்றும், நிதி அமைச்சர் சுனக், தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவிக்கு வரி விலக்கு பெற்றுக் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சர்ச்சைத் தவிர்க்கும் பொருட்டு அக்ஸதா வரி செலுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தடைகளை பிரிட்டன் விதித்துள்ளது. ரஷ்யாவை கடுமையாக நிதிஅமைச்சர் ரிஷி சுனக் விமர்சித்து வருகிறார். ஆனால்,தனது மனைவி முக்கியப் பங்குதாரராக இருக்கும் இன்போசிஸ் நிறுவனம் மட்டும் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கினர். இதன் காரணமாக ரஷ்யாவிலிருந்து இன்போசிஸ் வெளியேறலாம் எனத் தெரிகிறது