
சமீபத்திய சேவை தொடர்பான பிரச்சினைகளால் பெரும் விமர்சனத்தை சந்தித்த இண்டிகோ, பயணிகளின் நம்பிக்கையை மீண்டும் பெற பல தாராள அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. விமானிகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் கடந்த வாரம் மட்டும் 4,900-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இந்த நிலைமையை மத்திய அரசு தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில், இண்டிகோ தனது சேவைகளில் 10 சதவீதத்தை தற்காலிகமாக குறைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கோபத்தை குறைக்க நடவடிக்கை
பாதிப்பு அடைந்த பயணிகளின் கோபத்தையும் அதிருப்தியையும் சமாதானப்படுத்துவதற்கும், நிறுவனத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும் இண்டிகோ பல சலுகைகளை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, ரத்து செய்யப்பட்ட 12.5 லட்சம் பயணச்சீட்டுகளுக்கான ரூ.1,158 கோடி தொகை நேரடியாக பயணிகளின் வங்கி கணக்குகளில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் அதிகமாக சிக்கலில் சிக்கிய பயணிகளுக்காக கூடுதல் நற்பலன்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வீடு தேடி வரும் ‘கிஃப்ட் வவுச்சர்’
ரத்து காரணமாக பயணம் செய்ய முடியாத ஒவ்வொரு பயணிக்கும் ரூ.10,000 மதிப்பிலான ‘கிஃப்ட் வவுச்சர்’ வழங்கப்படும். இந்த வவுச்சரை அடுத்த 12 மாதங்களுக்குள் எந்த இண்டிகோ விமானத்திலும் பயன்படுத்த முடியும் என்பதும் கூடுதல் நன்மையாக உள்ளது. மேலும் மத்திய அரசின் விதிமுறைகளின்படி, பயண ரத்து அல்லது கடுமையான கால தாமதத்தை எதிர்கொண்டவர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை தனி இழப்பீடும் வழங்கப்படும். பயணிகள் எவ்வளவு சிரமத்துக்கு உள்ளானார்கள் என்பதன் அடிப்படையில் இந்த இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்படும்.
பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் எங்களின் தாரக மந்திரம்
பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் எங்களின் முதன்மை எனவும், பயணிகளின் நலனை முன்னிலைப்படுத்துதலே இண்டிகோவின் நோக்கம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய சிக்கல் காரணமாக ஏற்பட்ட எதிர்மறை கருத்துக்களை மாற்றி, தனது நல்ல பெயரை மீண்டும் நிலைநிறுத்த முயற்சிக்கும் இண்டிகோவின் இந்த நடவடிக்கைகள் பயணிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.