இண்டிகோ நிறுவனம் 30 Firm A350-900 விமானங்களை ஆர்டர் செய்ய ஒப்புக்கொண்டது என்றும் இது இண்டிகோ அதன் இறக்கைகளை மேலும் விரிவுபடுத்தவும் அதன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும் உதவும் என்றும் அந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
இண்டிகோ (IndiGo) நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் 30 A350-900 ஜெட் விமானங்களை வாங்குவதற்காக ஆர்டர் கொடுத்துள்ளது. இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் 60% பங்கைக் கொண்டுள்ள இண்டிகோ, 2030ஆம் ஆண்டுக்குள் அதன் சேவையை இரட்டிப்பாக்கி, சர்வதேச அளவிலும் விமான இயக்கத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த 30 விமானங்களுடன், 70 A350 விமானங்களைக் கொள்முதல் செய்யவும் ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புதிய விமானங்களை வாங்குவதன் மூலம் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவுக்குப் போட்டியாக தொலைதூர விமானங்களை இயக்க முடியும். குறிப்பாக, இந்தியா-அமெரிக்கா இடையே நேரடியாக இயக்கப்படும் நான்ஸ்டாப் விமானங்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு, இண்டிகோ ஏர்பஸ் நிறுவனத்துடன் 500 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தது. இந்திய விமான வரலாற்றில் ஒரு சாதனையாக அமைந்தது. இத்துடன் நிலுவையில் உள்ள ஆர்டரில் 1,000 விமானங்களும் உள்ளன.
ஐசிஐசிஐ வங்கி மொபைல் செயலியில் கோளாறு: 17,000 கிரெடிட் கார்டுகளின் பாதுகாப்பில் ஓட்டை!
"இண்டிகோ நிறுவனம் 30 Firm A350-900 விமானங்களை ஆர்டர் செய்ய ஒப்புக்கொண்டது. இது இண்டிகோ அதன் இறக்கைகளை மேலும் விரிவுபடுத்தவும் அதன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும் உதவும். பல்வேறு இந்திய பெருநகரங்களை உலகின் பல பகுதிகளுடன் இணைக்கும் விமானங்களை இயக்க முடியும். புதிய விமானங்கள் ரோல்ஸ் ராய்ஸின் ட்ரெண்ட் எக்ஸ்டபிள்யூபி எஞ்சின் கொண்டதாக இருக்கும்" என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
விமானங்களின் இருக்கும் வசதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2027இல் டெலிவரி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசியிருக்கும் இண்டிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ. பீட்டர் எல்பர்ஸ், "இன்றைய வரலாற்று தருணம் இண்டிகோவிற்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. அதே நேரத்தில் இந்திய விமானப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும். புதிய 30 ஏர்பஸ் ஏ350-900 விமானங்கள் இண்டிகோவை சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக மாற்றும்" என்று குறிப்பிட்டுள்ளார்.