ஐசிஐசிஐ வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கடந்த சில நாட்களில் வழங்கப்பட்ட சுமார் 17,000 புதிய கிரெடிட் கார்டுகள் எங்கள் டிஜிட்டல் சேனல்களில் தவறாக மேப் செய்யப்பட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் iMobile Pay என்ற மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் உள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஒரு வாடிக்கையாளர் மற்ற மற்றவர்களின் கிரெடிட் கார்டு விவரங்களை பார்க்க முடிவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியிடம் பல வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். பல பயனர்களிடம் இருந்து புகார்கள் வந்த பிறகு, இந்தச் சிக்கலைச் சரிசெய்வதற்காக ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு தகவல்களுக்கான அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கடந்த சில நாட்களில் வழங்கப்பட்ட சுமார் 17,000 புதிய கிரெடிட் கார்டுகள் எங்கள் டிஜிட்டல் சேனல்களில் தவறாக மேப் செய்யப்பட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
"இது வங்கியின் கிரெடிட் கார்டு போர்ட்ஃபோலியோவில் 0.1 சதவீதம். உடனடி நடவடிக்கையாக, இந்த அட்டைகளை நாங்கள் ப்ளாக் செய்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்காக வருந்துகிறோம். இதனால் கிரெடிட் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக இதுவரை எந்தப் பதிவு இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், டெக்னோஃபினோ நிறுவனத்தைத் தொடங்கிய சுமந்தா மண்டல் இந்தக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி ஐசிஐசிஐ வங்கியை விமர்சித்துள்ளார். "இந்தச் சிக்கலை விரைவாகத் தீர்க்க வேண்டும். ஐசிஐசிஐ வங்கியும், இந்திய ரிசர்வ் வங்கியையும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
"பல பயனர்கள் தங்கள் iMobile Pay செயலி மூலமாக மற்ற வாடிக்கையாளர்களின் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு தகவல்களைப் பார்க்க முடிவதாகப் புகார் அளித்துள்ளனர். கிரெடிட் கார்டு எண், காலாவதியாகும் தேதி மற்றும் சிவிவி ஆகியவை மொபைல் அப்ளிகேஷனில் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். இதை வைத்து மற்றவர்களின் கணக்கில் சர்வதேச பரிவர்த்தனையைக்கூட நிர்வகிக்க முடியும். இதனால், இன்னொருவரின் கிரெடிட் கார்டு தவறாக பயன்படுத்தப்படலாம்" என்று சுமந்தா கவலை தெரிவித்துள்ளார்.