
மத்திய பட்ஜெட்டில் நிதி்அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சியைத் தடுக்கும்விதத்தில்அறிவித்த ரிசர்வ் வங்கியின் டிஜி்ட்டல் ருபி எப்போது அறிமுகமாகும், எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் கிரிப்டோகரன்சிகள் மீது முதலீடு செய்பவர்கள், அதிலிருந்து முதலீட்டு லாபம்பார்ப்பவர்களுக்கு 30 சதவீதம் வரிவிதிப்பை அறிமுகப்படுத்தினார். அதோடு மட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கி தரப்பில் சிபிடிசி எனப்படும் டிஜிட்டல் ருபி உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
ரிசர்வ் வங்கி தரப்பில் உருவாக்கப்படும் டிஜிட்டல் ருபி குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனியார் வெளியிடும் கிரிப்டோகரன்சி போன்று இல்லாமல் நிலையான மதிப்புடன், அரசின் அங்கீகாரத்துடன், சட்டப்பாதுகாப்புடன் இந்த டிஜிட்டல் ருபி இருக்கும் என்றுமட்டும் முதல்கட்டத் தகவல் கிடைத்துள்ளது.
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி(cbdc) பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி டிஜிட்டர் கரன்சி குறித்த தவலை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது
“ பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த, டிஜிட்டல் கரன்சி அல்லது டிஜிட்டல் ருபி, 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியால் வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள்ஏறக்குறைய முடிந்துவிட்டன.
தற்போது புழக்கத்தில் இருக்கும் அரசின், ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ ரூபாய் நோட்டுகளில் இருப்பதைப் போன்று சீரியல் எண், யுனிட்கள், தனிப்பட்ட எண்கள் ஆகியவை டிஜிட்டல் ருபியிலும் வழங்கப்படும். இந்த யுனிட்கள் டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட்டு, கரன்சி புழக்கத்தோடு சேர்க்கப்படும்.
மின்னணு வடிவம்
ரிசர்வ் வங்கியால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு புழக்கத்தில் இருக்கும் பியட் கரன்சியிலிருந்து பெரிதாக வேறுபட்டு இருக்காது. மின்னணு வடிவத்தில் இந்த டிஜிட்டல் கரன்சி இருக்கும். சுருக்கமாகக் கூறினால், மின்னணு வடிவத்தில் பியட் கரன்சி இருந்தால், அதுதான் டிஜிட்டல் கரன்சி. மக்கள் மின்னணு வேலட் வைத்துக்கொண்டு அதில் டிஜிட்டல் கரன்சியை சேமிக்கலாம்.
எப்போது அறிமுகம்
அடுத்த நிதியாண்டு முடிவில் டிஜிட்டல் ருபி அறிமுகமாகும் என ரிசர்வ் வங்கி தகவல்கள் கூறினாலும், அதை விரைவாகவே அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆதலால், 2023ம் ஆண்டு தொடக்கத்திலேயே அறிமுகமாகலாம்.
எப்படி செயல்படும்
ரிசர்வ் வங்கி மூலம் உருவாக்கப்படும் டிஜிட்டல் ருபி பிளாக்செயின் மூலம் அனைத்துவிதமான பரிமாற்றங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
அதாவது, தனியார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் வேலட் போன்று அல்ல. தனியார் நிறுவனங்கள்அறிமுகப்படுத்தும் மின்னணு வாலட்களில் இருந்து நிறுவனத்துக்கு அனுப்பி அங்கிருந்து தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணத்தை அனுப்புகிறார்கள்.
ஆனால், டிஜிட்டல் ருபியைப் பொறுத்தவரை, நீங்கள் டிஜிட்டல் கரன்சியை வைத்திருந்தால், அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். எந்த பரிமாற்றமும்,யாருக்குச் செய்தாலும், அது ரிசர்வ் வங்கியின் டேட்டா மையத்தில் பதிவாகும். டிஜிட்டல் கரன்சியை தனியார் நிறுவனத்தின் இ-வாலட்டுக்கு பரிமாற்றம் செய்தால், அந்தநிறுவனத்தின் மூலம் செய்யும் பரிமாற்றத்துக்கும் கட்டணம் விதிக்கப்படும். ஒருவர் தங்களின் பர்ஸில் பணம் வைத்திருப்பதற்கு பதிலாக, மொபைலில் பணம் வைத்திருப்பார்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.