இந்திய பங்குச் சந்தை 1000 புள்ளிகள் அதிகரித்து, 61,689 புள்ளிகளைத் தொட்டு முதலீட்டார்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து இருப்பதால் அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் இன்று எதிரொலித்து சென்செக்ஸ் சமீபத்திய உச்சமாக காணப்படுகிறது.
அமெரிக்காவின் பணவீக்கம், போட்டி நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்க பத்திரங்களின் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி ஆசிய பங்குச் சந்தை இன்று ஏறுமுகமாக இருக்கிறது. அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் செப்டம்பர் மாதத்தில் 8.2% ஆக இருந்தது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 7.7%சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
துள்ளிக் குதித்த காளை:
இந்திய பங்குச் சந்தை 1000 புள்ளிகள் அதிகரித்து, 61,689 புள்ளிகளையும், நிப்டி 18,300 புள்ளிகளையும் தொட்டுள்ளன. கடந்த 52 வாரங்களுக்குப் பின்னர் சென்செக்ஸ் இந்தளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 81.81 ரூபாயில் இருந்து 80.74 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரே நாள் இரவில் அமெரிக்க டாலரின் குறியீட்டு எண் 2% அதிகமாக குறைந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. அதாவது, பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாள் இரவில் இந்த வீழ்ச்சியை அமெரிக்க எதிர்கொண்டுள்ளது. டாலரின் வீழ்ச்சியால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.
இதற்கு முன்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் சென்செக்ஸ் உச்சபட்சமாக 62,245 புள்ளிகளை தொட்டு இருந்தது. அமெரிக்க டாலர் வீழ்ச்சி சென்செக்ஸ் மற்றும் நிப்டிக்கு லாபமாக பார்க்கப்படுகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் மாதாந்திர சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் திட்டத்தில் அதிகமாக முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. தற்போது வரைக்கும் இதன் மீதான முதலீடு 13,000 கோடியை கடந்துள்ளது.
Twitter Elon Musk: ட்விட்டர் நிறுவனம் திவாலாகிவிடும்! ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்
திருமணம் போன்ற உள்நாட்டு தேவைகளால் இந்திய உள்நாட்டுத் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய சந்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நன்றாகவே இருக்கும் என்று சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்தியப் பொருளாதாரமும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 6.5% முதல் 7% வரை வளர்ச்சி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கார்பரேட் நிறுவனங்களின் தொழில் வளர்ச்சியும் முன்னேற்றத்தில் இருப்பதால் இந்தியப் பொருளாதாரம் வரும் நாட்களில் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.