
2022ம் ஆண்டில் இதுவரை 9ஆயிரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அதைக் கொண்டு செல்ல கடந்த 3 மாதத்தில் மட்டும் 1900 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர சேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவுக்கு ரயில்வே துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில்வே துறை பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக 6,995 ரயில்களை ரத்து செய்துள்ளது. இதில் மார்ச் முதல் மே மாதம் வரை நிலக்கரி கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 1934 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் மின்தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை நிறைவு செய்ய நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1.15 லட்சம் கோடி மதிப்பில் 58 சூப்பர் மற்றும் 68 முக்கியத் திட்டங்களை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நாடுமுழுவதும் நடக்கின்றன. இந்தப் பணிகளால் பல இடங்களில் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
2022 ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 3,395 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களும், 3,600 பயணிகள் ரயில்கலும் பாரமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிலக்கரி கொண்டு செல்லவதற்காக 2020ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் எந்த ரயில்களும் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் கடும் மின்தட்டுப்பாடு பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டதால், அதற்குத் தேவையான நிலக்கரி அனுப்புவதற்காக கடந்த 3 மாதத்தில் மட்டும் 880 மெயில் எக்ஸ்பிரஸ், 1054 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் தட்டுப்பாட்டால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட்டை உறுதி செய்ய ரயில்வேயால் முடியாமல் தடுமாறியது. கடந்தசில ஆண்டுகளாக ரயில் டிக்கெட்டுகளுக்கு கடும் கிராக்கி இருந்தாலும், ரயில் சேவை குறைவாகவே இருக்கிறது.
2021-22ம் ஆண்டில் 1.60 கோடி பயணிகள் டிக்கெட் வாங்கியும் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருந்ததாலும், போதுமான ரயில்கள் இயக்காததாலும் பயணிக்கவில்லை.
சரக்குப் போக்குவரத்தைப் பொறுத்தவரை 2022, மே மாதத்தில் 13.16 மெட்ரிக் டன் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. உள்நாட்டில் எடுக்கப்பட்ட நிலக்கரி, இறக்குமதி செய்யப்பட்ட கரி என கூடுதலாக 11 மெட்ரிக் டன் அனல் மின்நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஆண்டில் 41.01 மெட்ரிக் டன் நிலக்கரி கையாளப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் 52.40 மெட்ரிக் டன் நிலக்கரி இதுவரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.