உலகின் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரம், நிதிக் கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக நோபல் பரிசு பெற்ற மைக்கேல் ஸ்பென்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதன்முறையாக கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதியன்று 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது. முதல் முறையாக 4 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) அடைந்து, குறிப்பிடத்தக்க பொருளாதார அடையாளத்தை இந்தியா தாண்டியுள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் 7.3 டிரில்லியன் டாலர்கள் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்தியா அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு 2023-24 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 7.6 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பொருளாதார ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தரவு சுட்டிக்காட்டுகிறது. பொருளாதார வல்லுனர்கள் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 முதல் 6.7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என கணித்த போதும்கூட, அதனை விட அதிகமாக அளவீட்டை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பதிவு செய்துள்ளது
இந்த நிலையில், உலகின் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரம், நிதிக் கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் மைக்கேல் ஸ்பென்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
நேரடி வரி வசூல் 17.30 சதவீதம் அதிகரிப்பு: மத்திய நிதி அமைச்சகம் தகவல்!
கடந்த 2001ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் மைக்கேல் ஸ்பென்ஸ், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பென்னட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது கருத்துக்களை தெரிவித்த அவர், மிக உயர்ந்த சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட ஒரு பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குவதாக குறிப்பிட்டார்.
“இப்போது அதிக சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட முக்கியப் பொருளாதாரம் இந்தியா. உலகின் மிகச் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. பிராந்தியங்களுக்கு பரந்த அளவிலான சேவைகளை வழங்குவது உள்ளிட்ட இந்தியாவின் பொருளாதாரம் போட்டித்தன்மை வாய்ந்தது.” என மைக்கேல் ஸ்பென்ஸ் கூறியதாக பென்னட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் ஒரு வகையான மாற்றத்தை உலகம் சந்தித்து வருவதாகவும் மைக்கேல் ஸ்பென்ஸ் கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் பொருளாதாரம் பரிணாம வளர்ச்சியைக் கண்டதாக தெரிவித்துள்ள மைக்கேல் ஸ்பென்ஸ், தொற்றுநோய்கள், புவிசார் அரசியல் பதட்டங்கள், காலநிலை மாற்றங்கள் போன்றவற்றால் 70 ஆண்டுகால உலகளாவிய அமைப்பு உடைந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.
விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதச் சட்டம் சாத்தியமா?
செயல்திறன் மற்றும் ஒப்பீட்டு நன்மைகளை மையமாகக் கொண்ட உலகளாவிய விநியோகச் சங்கிலி போன்ற பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உலகளாவிய அமைப்பு விரைவான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என மைக்கேல் ஸ்பென்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற சூழலில், உலகம் ஒற்றை பொருளாதார ஆதாரத்தை வைத்திருப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் கூறினார்.
பொருளாதாரம் கிழக்கு நோக்கி செல்வதால், உலகளாவிய பொருளாதாரத்தில் ஒரு அடிப்படை மாற்றம் உள்ளது, இதன் மூலம் விநியோகச் சங்கிலிகள் பன்முகப்படுத்தப்படுகின்றன. உலகளாவிய நிர்வாகம் முன்பை விட மிகவும் சிக்கலானதாகி வருகிறது என அவர் மேலும் கூறினார்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் மகத்தான முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய அவர், இது மனித நலனை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் என்ற அவர், சவாலான நேரங்களில் அதனை எதிர்கொள்ள நம்மிடம் உறுதியாக நடவடிக்கைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது, டிஎன்ஏ சோதனைக்கான செலவு முன்பு 10 மில்லியன் டாலராக இருந்தது. அது இப்போது 250 டாலராக குறைந்துள்ளது என்பதை அவர் மேற்கோள் காட்டினார். அதேசமயம், இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிர்மறையான பக்கம் இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
நம்மிடம் இப்போது நம்பமுடியாத சக்திவாய்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அவற்றை சரியாக பயன்படுத்தினால், பலதரப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வையும் வாய்ப்பையும் வழங்க முடியும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் மைக்கேல் ஸ்பென்ஸ் தெரிவித்துள்ளார்.