
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி மாதச் சம்பளம் ரூ.4,565 அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் சமீபத்திய வேலைவாய்ப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில், தினசரி ஊதியம் பெறும் சாதாரண தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ.139 உயர்ந்துள்ளது. இதேபோல் 6 ஆண்டுகளில் மொத்தம் 17 கோடி புதிய வேலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், வருமான அளவுகள் மேம்பட்ட வேலை உறுதிப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட வேலைத் தரத்தை காட்டுகின்றன என்றும் வேலைவாய்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் நிரந்தரச் சம்பளம் பெறும் ஊழியர்களின் சராசரி மாத வருமானம் ஜூலை-செப்டம்பர் 2017-ல் 16,538 ரூபாயில் இருந்து ஏப்ரல்-ஜூன் 2024ல் 21,103 ரூபாயாக அதிகரித்துள்ளது. சராசரி மாதச் சம்பளம் ரூ.4,565 அதிகரித்துள்ளது. இதேபோல், சாதாரணத் தொழிலாளர்களின் சராசரி தினசரி கூலி, இதே காலகட்டத்தில், ரூ.294-லிருந்து ரூ.433 ஆக உயர்ந்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தியாவில் வேலையின்மை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. வேலையின்மை விகிதம் 2017-18-ல் 6.0% ல் இருந்து 2023-24-ல் 3.2% ஆக குறைந்துள்ளது. 'இது உற்பத்தி வேலைவாய்ப்பில் பணியாளர்களை அதிகளவில் உள்ளிழுப்பதைக் குறிக்கிறது. அதே காலக்கெடுவில், இளைஞர் வேலையின்மை விகிதம் 17.8%-லிருந்து 10.2% ஆகக் குறைந்துள்ளது, இது ILO-வின் உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம் 2024-ன் படி, உலக சராசரியான 13.3%-க்கும் குறைவாக உள்ளது' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நகர்புறத்தில் வேலையின்மை குறைவு
'நகர்ப்புற ஆண்களின் வேலையின்மை ஜூலையில் 6.6% இருந்து 5.9% ஆகக் குறைந்துள்ளது. அதே சமயம் கிராமப்புற ஆண்களின் வேலையின்மை 4.5% ஆகக் குறைந்துள்ளது, இது நான்கு மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்' என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அறிக்கை கூறியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.