
இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, அக்டோபர் 4, 2025 முதல் வங்கிகளில் காசோலை (செக்) டெபாசிட் செய்தால் அதே நாளிலேயே பணம் கணக்கில் வரும்படி புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதுவரை செக் கிளியரிங் செய்ய ஒரு அல்லது இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில், இனி சில மணி நேரங்களுக்குள் செக் கிளியரிங் முடிவடையும்.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
முதல் கட்டமாக, இந்த திட்டம் அக்டோபர் 4 முதல் 2026 ஜனவரி 3 வரை அமல்படுத்தப்படும். இரண்டாம் கட்டம் 2026 ஜனவரி 3க்கு பிறகு தொடங்கும். காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை வங்கிகளில் செக் டெபாசிட் செய்தால், அதே நாளே பணம் கணக்கில் சேரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செக்குகள் ஒவ்வொரு மணி நேர அடிப்படையிலும் கிளியரிங் மையங்களுக்கு அனுப்பப்படவிருக்கின்றன. வங்கிகளில் தொகை போதாமை, கையொப்ப பிழை அல்லது பிற காரணங்களால் தவறான செக்குகள் பவுன்ஸ் செய்யப்படும். ஏற்கனவே HDFC, ICICI போன்ற சில தனியார் வங்கிகள் இந்த நடைமுறையை தங்களது வாடிக்கையாளர்களுக்காக செயல்படுத்தியிருந்தன.
வணிகர்கள், தொழில் அதிபர்கள் வரவேற்பு
இந்த மாற்றம் வாடிக்கையாளர்கள், வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பெரும் நன்மையாக அமையும். பண பரிமாற்றத்தில் தாமதமின்றி, நம்பகத்தன்மையுடனும் வேகத்துடனும் பரிவர்த்தனை செய்ய முடியும். இதன்மூலம் இந்திய வங்கி அமைப்பில் ஒரே மாதிரி, தடையற்ற செக் கிளியரிங் நடைமுறை நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.