வருமான வரி தின விழாவில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை ஒரு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகக் கூறியுள்ளார்.
வருமானத்தை அறிவிக்காத அல்லது வருமானத்தைக் குறைத்துக் காட்டிய ஒரு லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார்.
கடந்த 4 முதல் 6 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி விவரங்கள் தொடர்பாக இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் இந்த நோட்டீஸ்கள் தொடர்பான நடவடிக்கைகளை மார்ச் 31, 2024ஆம் ஆண்டுக்குள் வருமான வரித்துறை நிறைவு செய்யும் என்றும் நித அமைச்சர் கூறினார்.
"தாக்கல் செய்யப்பட்டதை விட வருமானம் அதிகம் என்று தெரியவந்ததன் அடிப்படையில் ஒரு லட்சம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் வருமானம் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது அல்லது அவர்கள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை." என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆன்லைனில் ரூ.10 லட்சத்தை பறிகொடுத்தவருக்கு 8 அட்வைஸ்! எஸ்பிஐ சொல்வது என்னென்ன தெரியுமா?
"இவை யோசிக்காமல் அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் அல்ல. மார்ச் 2024க்குள் இவை தொடர்பாக முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் எனக்கு உறுதியளித்துள்ளது" என்றும் அமைச்சர் தெரிவித்தார். மத்திய நேரடி வரிகள் வாரியம் மே 2023இல் 55,000 நோட்டீஸ்கள் குறித்து மதிப்பீட்டு செய்து முடித்திருக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதற்கு முன் வரி செலுத்துவோர் 10 ஆண்டுகளுக்கு தங்கள் வருவாய் தொடர்பான கணக்குகளை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அது ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "வருமான வரி அதிகாரிகள் 4 முதல் 6 ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் கணக்குகளை மட்டுமே மறுமதிப்பீடு செய்கிறார்கள்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம்தான் பதில். வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இது உதவியுள்ளது. வரி செலுத்துவோருக்கு வெளிப்படையான, நட்புரீதியான நடைமுறையை வழங்கவும் தொழில்நுட்பம் உதவுகிறது என்று நிதி அமைச்சர் கூறினார்.
வருமான வரிச் சட்டத்தின் கீழ், அதிகாரிகள் முந்தைய ஆறு ஆண்டுகள் வரையான வருமான வரி தாக்கல் விவரங்களை மறுமதிப்பீடு செய்ய முடியும். பெரும்பாலும் ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிகழ்வில் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா, இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில் 7% பேர் புதிய வரி செலுத்துவோர் என்றும், ஜூலை 31க்குள் அவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.
85 நாட்களுக்குப் பின் மணிப்பூரில் இன்டர்நெட் தடை நீக்கம்! ஆனால் VPN பயன்படுத்தக் கூடாது!