உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்கக் கூடிய ஒரு நீரிணை

Published : Jun 25, 2026, 01:21 PM IST
How the strait of Hormuz could reshape your investment portfolio

சுருக்கம்

ஹோர்முஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாக உள்ளது. 2026ல் ஏற்பட்ட புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இந்தியப் பொருளாதாரம்,பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது.இருப்பினும், ரஷ்யா போன்ற மாற்று எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் சந்தையின் நீண்டகால மீள்திறன் முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.

33 கிலோமீட்டர் அகலமுள்ள இந்தக் கடல்சந்தியை நீங்கள் இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால், உங்கள் சமையலறையிலிருந்து அன்றாடப் பயணம் வரை, மளிகைப் பொருட்களின் மாதாந்திர பில்லில் இருந்து, இப்போது அதிகரித்து வரும் அளவில் உங்கள் முதலீட்டுத் போர்ட்ஃபோலியோ வரை, இது சத்தமின்றி உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. தினமும் சுமார் 2 கோடி (20 மில்லியன்) பேரல் கச்சா எண்ணெய் இதன் வழியாகக் கடந்து செல்கிறது. இது உலகம் முழுவதும் நுகரப்படும் எண்ணெய் பேரல்களில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிப்பது, இதற்கு நடைமுறையில் சாத்தியமான மாற்றுப் பாதைகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்பதுதான் . சிறிதளவு எண்ணெயை ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாக மாற்றி அனுப்ப முடிந்தாலும், அந்த மாற்றுப் பாதைகள் நாளொன்றுக்கு சுமார் 55 லட்சம் (5.5 மில்லியன்) பேரல் மட்டுமே கையாளும் திறன் கொண்டவை. இதன் பொருள், உலகின் மொத்த எண்ணெய் சப்ளையின் கணிசமான பகுதி இன்னமும் இந்த ஒரே கடல்வழிப் பாதையையே சார்ந்துள்ளது என்பதாகும்.

அது வெறும் ஆபத்து அல்ல. அது உலகளாவிய பலவீனம் ஆகும்.

இந்தியாவின் முக்கியத்துவம்

2026 பிப்ரவரியின் பிற்பகுதியில், அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய ராணுவத் தாக்குதல்கள் ஒரு பெரும் நெருக்கடியைத் தூண்டிய நேரத்தில், ஒட்டு மொத்த உலகமும் அதன் கடுமையான பாதிப்பை உணர்ந்தது. ஹார்முஸ் நீரிணை மூடப்படும் என்று ஈரான் அறிவித்ததன் சில நாட்களிலேயே, ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 70 டாலருக்கும் கீழ் என்ற நிலையிலிருந்து ஒரு பேரலுக்கு 138 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது; அதே நேரத்தில், கப்பல்களுக்கான போர்-அபாயக் காப்பீட்டுக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தன. இந்த சீர்குலைவின் தாக்கம் எவ்வளவு பெரியதாக இருந்தது என்றால், சர்வதேச எரிசக்தி முகமை (IEA) இதனைத் தன் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதிப்பு என்று விவரித்தது.

இந்தியாவுக்கு, இதில் உள்ள முக்கியத்துவம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. நமது கச்சா எண்ணெய்த் தேவையில் 87% ஐ நாம் இறக்குமதி செய்கிறோம். அதில் சுமார் பாதியளவு கச்சா எண்ணெய், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. இதனுடன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) ஆகியவற்றையும் சேர்த்துப் பார்த்தால், இந்தியாவின் சார்புநிலை இன்னும் தெளிவாகப் புரியும். நமது இயற்கை எரிவாயு இறக்குமதியில் 60% மற்றும் மொத்த LPG விநியோகத்தில் 54% ஆகியவை இந்த ஒரே கடல்வழிப் பாதையைக் கடந்து வருகின்றன. மேலும், இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் தமது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்காக இந்த LPG விநியோகச் சங்கிலியையே நம்பியுள்ளன.

இதன் பேரியல் பொருளாதார (macro economic) தாக்கம் மிக துரிதமாகவும் பெருமளவிலும் இருந்துள்ளது. மே 2026-இல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.63 என்ற எப்போதும் இல்லாத அளவிற்கு வரலாற்றுச் சரிவைச் சந்தித்தது; அதே நேரத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit) கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நிதியாண்டு 2026-இல் (FY26) 2% என்ற சாதகமான அளவில் இருந்த பணவீக்கம், நிதியாண்டு 2027-இல் (FY27) 5.1% ஆக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. அதே சமயம், நிதியாண்டு 2025-இல் (FY25) இந்தியா பதிவு செய்த 7.5% வளர்ச்சியை விட, தற்போது வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளன; மூடீ’ஸ் (Moody's), மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்புகளைக் குறைத்துள்ளன.

இருந்தாலும், இந்தியா பாதுகாப்பு இல்லாமல் இருந்து விடவில்லை.

இந்தியாவுக்குச் சாதகமாகச் செயல்படும் ஒரு காரணி, அதன் எரிசக்தி ஆதாரங்கள் பல்வகைப் படுத்தப் பட்டது ஆகும். 2017-ல் இறக்குமதியில் 1% ஆக மட்டுமே இருந்த ரஷ்ய கச்சா எண்ணெய், இப்போது விநியோகக் கலவையில் 36% ஆக உள்ளது. இது வளைகுடாப் பகுதியில் ஏற்படும் சீர்குலைவுகளில் இருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க உதவியது மற்றும் எந்த ஒரு பிராந்தியத்தின் மீதும் நாம் பெருமளவு சார்ந்து இருக்கும் நிலையையும் குறைத்தது.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களாக, இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்? உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் மார்க்கெட் வளர்ச்சிகளுடன் கூடவே, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான காரணியாக புவிசார் அரசியல் நிகழ்வுகள் மாறியுள்ளன. அவை எரிபொருள் விலை, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் நிறுவனங்களின் லாபத்தைப் பாதிக்கின்றன. இதன் விளைவாக, பலமான வணிகம், நிலையான உள்நாட்டுத் தேவை மற்றும் அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்கும் திறன் கொண்ட நிறுவனங்கள், இது போன்ற நிச்சயமற்ற காலங்களில் பொதுவாக சவால்களை சந்திக்க சிறந்த தயார்நிலையில் இருக்கின்றன.

அதே சமயம், உலகளாவிய நிகழ்வுகளால் ஏற்படும் மார்க்கெட் ஏற்ற இறக்கங்கள் ஒன்றும் புதிதானவை அல்ல என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே, ஐரோப்பிய இறையாண்மைக் கடன் நெருக்கடி, பணமதிப்பிழப்பு, கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்ற பல நிகழ்வுகளை சந்தைகள் கடந்து வந்துள்ளன. ஒவ்வொரு நிகழ்வும் வெவ்வேறு என்றாலும், சந்தையின் எதிர்வினைகள் ஒரு கணிக்கக் கூடிய முறையையே பின்பற்றின — அதாவது முதலில் நிச்சயமற்ற தன்மை, அதைத் தொடர்ந்து மீட்சி. இத்தகைய காலக்கட்டங்களிலும் தொடர்ந்து முதலீட்டைக் கைவிடாமல் அதில் நிலைத்து நின்றிருந்த முதலீட்டாளர்கள், நீண்ட காலத்தில் பெரும்பாலும் நல்ல பலன்களைப் பெற்றனர் என்பதை வரலாறு உணர்த்துகிறது.

நிச்சயமற்ற சூழ்நிலை மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், அது நீண்டகால முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கக் கூடும். தற்போது பங்குகளின் மதிப்பீடுகள் ஓரளவு வசதியான நிலைக்கு வந்துள்ளன; அதே சமயம் இந்தியாவின் அடிப்படைக் கட்டுமான வளர்ச்சிக் கதை இன்னும் நிலையாக நிற்கிறது. புவிசார் அரசியல் பதற்றங்கள் படிப்படியாகக் குறையும் போது, மார்க்கெட்கள் மேலும் சாதகமான வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லக் கூடும். நல்ல விலைகள் பெரும்பாலும் நல்ல காலங்களில் கிடைப்பதில்லை. ஆனால் நிச்சயமற்ற காலங்களிலும் பொறுமையுடன் முதலீட்டைக் கை விடாமல் தொடரும் முதலீட்டாளர்கள், காலப்போக்கில் அதன் பலனைப் பெறுவது பல முறை நடப்பதுண்டு.

ஹோர்முஸ் நீரிணை என்பது, ஒரு குறுகிய கடல்சந்திப்பு கூட உலகப் பொருளாதாரத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான நினைவூட்டலாகும். எரிசக்திப் பாதுகாப்பும், பொருளாதாரப் பாதுகாப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இந்தத் தொடர்பைப் புரிந்து கொள்ளும் முதலீட்டாளர்கள், நிச்சயமற்ற சூழ்நிலைக்கு சிறந்த தயார் நிலையில் இருப்பதோடு, அவை வாய்ப்புகள் உருவாகும் போது அவற்றைக் கைப்பற்றிக் கொள்ளவும் முடியும்.

~ ஆசிரியர் : சோரப் குப்தா Sorbh Gupta, தலைவர் -ஈக்விட்டி, பஜாஜ் ஃபின்சர்வ் அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு டபுள் ஜாக்பாட்! ரூ.350 FASTag பாஸ் வந்தாச்சு... டோல் கட்டணம் பற்றி கவலையே வேண்டாம்