விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் - ஹோண்டா கொடுத்த மாஸ் அப்டேட்

By Kevin KaarkiFirst Published Feb 24, 2022, 3:24 PM IST
Highlights

ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா E மாடலின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தலைவர் அடுஷி ஒகாடா இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வது பற்றிய திட்டமிடல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதன்படி அடுத்த நிதியாண்டிற்குள் இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்யப்படலாம் என அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு ஹோண்டா பென்லி E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூனேவில் உள்ள ARAI மையத்தின் அருகில் சோதனை செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்தியாவில் இந்த மாடல் வெளியிடப்படாது என்ற நிலையில், பேட்டரி மாற்றும் தொழில்நுட்பத்தை சோதனை செய்ய ஹோண்டா இதனை பயன்படுத்துவதாக கூறப்பட்டது. 

இதுதவிர ஹோண்டாவின் துணை பிராண்டான ஹோண்டா பவர் பேக் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் பெங்களூருவில் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி மாற்று தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் நடத்தி வருகிறது. ஏற்கனவே பேட்டரி மாற்று தொழில்நுட்பத்தை வழங்க பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பித்து விட்டன. இந்த சேவையை பவுன்ஸ் நிறுவனம்  சந்தா முறையில் வழங்கி வருகிறது.

தற்போதைய தகவல்களின் படி ஹோண்டா நிறுவனம் முதற்கட்டமாக தனது ஆக்டிவா மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் பஜாஜ் செட்டாக், டி.வி.எஸ். ஐ-கியூப் மற்றும்  விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் மாணியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2022 பொது பட்ஜெட்டில் பேட்டரி மாற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அரசு திட்டம் தீட்டி வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

click me!