gst : gst council :சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு பெறும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த இடைக்கால அறிக்கையை ஜிஎஸ்டியின் அமைச்சர்கள் குழு விரைவில் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.
GST Council's 47th meeting to be held on June 28-29 2022: சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு பெறும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த இடைக்கால அறிக்கையை ஜிஎஸ்டியின் அமைச்சர்கள் குழு விரைவில் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.
ஜிஎஸ்டி வரியை சீரமைப்பு குறித்துதான் பெரும்பாலும் அறிக்கை இருக்கும், ஆனால் ஜிஎஸ்டி வரியை மாற்றுவது, படிநிலையை மாற்றுவது குறித்து இருக்காது எனத் தெரிகிறது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு நேற்று காணொலியில் கூடி ஆலோசனை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் “ ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து விலக்குப் பெறும் பொருட்கள், வரி சீரமைப்பு, வருவாய் அதிகரிப்பு ஆகியவை குறித்துதான் பேசப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சில வரிப்படிநிலையை ஒன்றாக இணைத்தல், சில பொருட்களுக்கு வரியை சீரமைத்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கவில்லை” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இதற்கிடையே ஜிஎஸ்டி கவுன்சில் அளித்த அவகாசத்துக்குள் அமைச்சர்கள் குழு, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யும் எனத்தெரிகிறது. இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும் முன், ஜிஎஸ்டி கவுன்சில் கூடுவதற்கு முன் மீண்டும் அமைச்சர்கள் குழு கூடி விவாதிக்கும்.
இதுகுறித்து அமைச்சர்கள் குழு வட்டாரங்கள் கூறுகையில் “ வரியைச் சீரமைத்தால் வருவாயை பாதிக்குமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இரு வரிகளை ஒன்றாக இணைக்கும்போது, அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகள் முன்வைக்கப்படும். இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டுதான் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்
இதற்கிடையே 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 28, 29ம் தேதி ஸ்ரீநகரில் நடக்க உள்ளது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் குழு அளி்க்கும் பரிந்துரையின்படி, விலக்கு அளிக்கப்படும் பொருட்கள், சேவைகள், கச்சா பொருட்களுக்கு வரிக் குறைப்பு ஆகியவை குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏறக்குறைய 149 பொருட்கள், 87 சேவைகள் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டியில் குறைந்தபட்ச வரியாக தற்போது 5 சதவீதம் இருக்கிறது, இது 7 அல்லது 8 சதவீதமாக உயர்த்தப்படலாம். பிற வரிகளும் மாற்றப்படலாம். தற்போது 4 வரிப்படிநிலைகள் உள்ளன, அதாவது, 5,12,18,28ஆகிய நிலைகள் உள்ளன. இவை கலைக்கப்பட்டு 3 படிநிலைகள் உருவாக்கப்படலாம்.