
47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவீதத்தை முறைப்படுத்துதல், மாநிலங்களுக்கு இழப்பீ்டு வழங்குவதை நீட்டித்தல் இரு முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.
நிதிஅமைச்சர் வருகை
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு உலகவங்கி, சர்வதேச நிதியம் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ளார். இவர் மேமாத தொடக்கத்தில் தாயகம் திரும்புவார். அதன்பின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கும்.
2 அம்சங்கள்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுவது மாநிலங்களுக்கு இழப்பீட்டை நீட்டிப்பதாகும். ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு வரிஇழப்பீடு தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது, அந்தவகையில் வரும் ஜூன் மாதத்தோடு அந்தக் காலம் முடிகிறது. அதன்பின் இழப்பீட்டை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கத் தேவையில்லை.
இழப்பீடு நீட்டிப்பு
ஆனால், இந்த இழப்பீட்டை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன. குறி்ப்பாக பாஜக ஆளாத மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளன. இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
சட்டத்திருத்தம்
ஒருவேளை இழப்பீடு வழங்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புத் அளித்தாலும், அதற்கு நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் 101வது சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். அது மழைக்காலக் கூட்டத்தொடரில்தான் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற முடியும்.
அதேசமயம், இழப்பீடு வழங்க முடியாது என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுத்தால், மாநிலஅரசுகளின் வருவாய் மோசமாகப் பாதி்க்கப்படும். 28 சதவீதவரி நிலையில் இருக்கும் பான் மசாலா, புகையிலை, சொகுசுகார்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டஆடம்பர பொருட்களுக்கான வரிவிதிப்பில் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்வு கிடைக்கும்.
வரிவீதம் மாற்றம்
2-வதாக ஜிஎஸ்டி வரிஅமைப்பு முறையை எளிமைப்படுத்துவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இதன்படி வரிவிதிப்பை மறுஆய்வு செய்தலும், வரிவிலக்கில் இருக்கும் பொருட்களையும் மறுஆய்வு செய்தலும் நடக்கும். அதாவது தற்போது வரிவிலக்கில் இருக்கும் பல பொருட்கள் வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படலாம். சிலவரிகள் நீக்கப்பட்டு, புதிய வரி உருவாக்கப்படலாம், அல்லது குறைக்கப்படலாம்.
அதாவது 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரிகள் நீக்கப்பட்டு ஒரேஒரு வரி மட்டும் கொண்டுவரப்படலாம். 5 சதவீத வரி நீக்கப்பட்டு, 8 சதவீதமாக உயர்த்தப்படலாம். தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு 5, 12, 18 28 ஆகிய வீதத்தில் இருக்கிறது. இந்த படிநிலைகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.