தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது நன்மை பயக்கும் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கம்தான் முக்கிய சேமிப்பாக இருக்கிறது. பங்குச்சந்தை, மியூசுவல் ஃபண்ட் என எவ்வித விவரமும் அறியாதவர்கள் தங்கத்தில்தான் முதலீடு செய்கின்றனர். அதேபோல், தங்கமும் எப்போதும் அவர்களை கைவிடுவதில்லை. பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், தங்கம் எப்போதும் ஏறுமகாகவே இருக்கிறது.
இக்கட்டான காலகட்டத்தில் தங்கத்தை வைத்து பணமாக்கிக் கொள்ளலாம். எனவே, பெரும்பாலானோர் தங்கத்திலேயே தங்களது முதலீடுகளை அதிகமாகச் செய்கின்றனர். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு குறைவாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை கொரோனாவுக்கு பின்னர் மளமளவென அதிகரித்தது.
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?
அதன்பிறகு, மீண்டும் குறைந்து தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6000ஐ நெருங்கி விற்பனையாகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த துறையில் இருப்பவர்கள் கணிக்கிறார்கள். இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “தங்கத்தின் விலை அதிகமாக உயராமலும், கீழே இறங்காமலும் உள்ளது. இதற்கு பிறகு அதன் விலை குறைய வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களுக்கு இதே அளவிலேயே தங்கத்தின் விலை நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, தங்கத்தை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.” என்கிறார்.
“அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கும் போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கும். அவர்கள் வட்டியை பெருமளவும் குறைக்கும் பட்சத்தில், தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7000 வரை செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். எனவே, இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கத்தை வாங்கலாம். அவர்கள் வட்டியை குறைத்தவுடன் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இப்போதே தங்கத்தை வாங்கியவர்களுக்கு அப்போது அது பலனளிக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.