
நகைகள் போன்ற தங்க விற்பனை தொடர்பான புதிய விதிகளை மத்திய அரசு சமீபத்தில் உருவாக்கியுள்ளது. தங்க நகைகள் விற்பனையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதையும், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டு இந்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அனைத்து தங்க நகைகளும் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) பெற்றிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதி இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. எனவே உங்களிடம் ஹால்மார்க் இல்லாத பழைய தங்க நகைகள் இருந்தால், அதை மாற்றவோ அல்லது விற்கவோ விரும்பினால், அதை ஹால்மார்க் செய்ய வேண்டும்
HUID என்றால் என்ன?
நகை தயாரிப்புக்கான தனித்துவமான பண்புகளை ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் வழங்குகிறது. மேலும் தங்க நகைகள் தூய்மையைக் கொண்டிருப்பதையும் இது உறுதி செய்கிறது. தங்கப் பொருட்களில் தூய்மை முத்திரை இருக்க வேண்டும், எடுத்துக்காட்டாக, 22 காரட் மற்றும் இந்திய தரநிலைகள் பணியகமான BIS லோகோ இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : ஷாக் நியூஸ்.. அமேசான் ஷாப்பிங் அடுத்த மாதம் முதல் விலை இருக்கும்.. ஏன் தெரியுமா?
ஹால்மார்க் இல்லாத பழைய நகைகளை விற்க முடியுமா?
அரசு விதிகளின்படி, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை விற்க முடியாது. உங்களிடம் பழைய ஹால்மார்க் இல்லாத தங்க ஆபரணங்களை மாற்றவோ அல்லது விற்கவோ வைத்திருந்தால், அவற்றை HUID மூலம் ஹால்மார்க் செய்ய வேண்டும்.
உங்கள் நகைகள் பழைய/முந்தைய ஹால்மார்க் அடையாளங்களுடன் பொறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஹால்மார்க்கிங் செயல்முறைக்கு செல்ல வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். HUID இல்லாத தங்கம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது தவிர, இரண்டு கிராமுக்கு கீழ் உள்ள தங்கம், சர்வதேச கண்காட்சிகளுக்கான நகைகள், வெளிநாட்டு வாங்குபவரின் குறிப்பிட்ட தேவைக்கேற்ப ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் ஃபவுண்டன் பேனாக்கள், கைக்கடிகாரங்கள் அல்லது சிறப்பு வகை ஆபரணங்கள் ஆகியவை ஹால்மார்க்கிங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 40 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட நகைக்கடைக்காரர்களுக்கும் இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பழைய தங்க நகைகளை ஹால்மார்க் செய்வது எப்படி?
வாடிக்கையாளர்கள் எந்த BIS-அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்திலிருந்தும் நகைகளை சோதனை செய்து கொள்ளலாம். பரிசோதிக்கப்பட வேண்டிய பொருட்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், ஒவ்வொரு பொருளுக்கும் ரூ.45 செலுத்த வேண்டும். 4 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் ரூ. 200 ஆக இருக்கும். BIS இல் பதிவுசெய்யப்பட்ட நகைக்கடை மூலம் அவர்களின் ஆபரணங்களை ஹால்மார்க் செய்துகொள்ளலாம். நகைக்கடைக்காரர் பொருளை BIS மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்திற்கு செயல்முறைக்காக எடுத்துச் செல்வார்.
இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களை எப்படி பாதிக்கும்?
புதிய ஹால்மார்க்கிங் விதிகள் தங்கம் வாங்கும் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும், பொருட்களின் தரம் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்யும். தங்கத்தை ஹால்மார்க் செய்யாத நகைக்கடைக்காரர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை, தங்க நகைகளின் விலையை விட 5 மடங்கு அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இதையும் படிங்க : இனி வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது.. வெளியான புதிய உத்தரவு
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.