எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபேம் 2 திட்டம் - முழு விவரங்கள்

By Nandhini SubramanianFirst Published Jan 24, 2022, 11:22 AM IST
Highlights

மத்திய அரசின் ஃபேம் 2 திட்டம் பற்றிய முழு விவரங்கள், இதனை எப்படி முறையாக  பயன்படுத்திக் கொள்வது என்ற விவரங்களை பார்ப்போம்.

மத்திய அரசின் ஃபேம் 2 திட்டம் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மக்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக தள்ளுபடியுடன் மானிய விலையில் வாங்க முடியும். 

ஃபேம் 2 திட்டம் எப்படி செயல்படுகிறது, இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஆட்டோமொபைல் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசு அளவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிவித்த திட்டம் தான் ஃபேம் 2. இதை கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டது. 

கடந்த ஆண்டு இதன் பலன்களில் மாற்றங்கள் செய்யப்பட்டது. மாற்றம் செய்யப்பட்டதும், இந்த திட்டம் முன்பு இருந்ததை விட அதிக பிரபலமானதாக மாறியது. முன்னதாக ஃபேம் 2 திட்டத்தில் ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரிக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த  திட்டம் மாற்றப்பட்டு ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரிக்கு ரூ. 15 ஆயிரம் வவரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இது எப்படி செயல்படுகிறது?

உதாரணத்திற்கு ஏத்தர் 450 பிளஸ் மாடலை  எடுத்துக் கொள்வோம். இதன் விலை எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் ரூ. 1,72,520. இதில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மத்திய அரசு ரூ. 43,500 மானியம் வழங்குகிறது. அதன்படி இதன் மொத்த விலையில் இருந்து மானிய தொகை கழிக்கப்பட்டு ரூ. 1,28,020 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர பல்வேறு மாநிலங்களில் தனித்தனியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், இவை ஃபேம் 2 போன்று இல்லாமல், மானியத் தொகை சில காலம் கழித்தே வழங்கப்படுகிறது. ஏத்தர் மட்டுமின்றி டி.வி.எஸ். ஐகியூப் எலெக்ட்ரிக், ஓலா எஸ்1, ஏத்தர் 450x போன்ற மாடல்களுக்கும் மானியத் தொகை வழங்கப்படுகிறது.

click me!