
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளில் வேலை கிடைப்பது பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது. அதிக சம்பளம், சர்வதேச அளவிலான பணிச்சூழல், பல்வேறு சலுகைகள் என கூகுள் போன்ற நிறுவனங்களில் பணிபுரிவது ஒரு மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இவ்வளவு வசதிகள் இருந்தாலும் மனதில் திருப்தி இல்லையென்றால் என்ன செய்வது? அதற்கு ஒரு வித்தியாசமான உதாரணமாக மாறியிருக்கிறார் மந்தாஜ் சித்து.
ஐதராபாத் முதல் டப்ளின் வரை கூகுள் நிறுவனத்தில் வெற்றிகரமாகப் பணியாற்றியவர் மந்தாஜ் சித்து. சுமார் ஐந்து ஆண்டுகள் அந்நிறுவனத்தின் விளம்பர பார்ட்னர்ஷிப் மற்றும் பிசினஸ் ஸ்ட்ராட்டஜி பிரிவில் பணியாற்றினார். அவரது ஆண்டு வருமானம் போனஸ் மற்றும் பங்குகள் உள்ளிட்டவற்றுடன் சுமார் €1 லட்சமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் அப்போது இது சுமார் ₹83 லட்சம். இப்படி கைநிறைய சம்பளம் கிடைத்தாலும், சித்துவின் மனதில் ஒரு கட்டத்தில் வாழ்க்கை குறித்த கேள்விகள் எழத் தொடங்கின. அந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடி, அவர் எடுத்த முடிவுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
‘தப்பான மலையில ஏறிட்டு இருக்கேன்’ - உறைத்த உண்மை
கார்ப்பரேட் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது பெரும்பாலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பெரிய நிறுவனம், வெளிநாட்டு வாய்ப்பு போன்றவற்றால் அளவிடப்படுகிறது. அந்த வகையில் சித்துவின் வாழ்க்கையும் வெற்றிகரமாகவே இருந்தது. ஆனால், வெளிப்புற வெற்றிக்கும் மனநிறைவுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை அவர் உணரத் தொடங்கினார். தொடர்ந்து உயர்ந்த பதவிகளையும் வருமானத்தையும் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையில் தனக்கு தேவையானதா என்ற கேள்வி அவருக்குள் உருவானது.
ஒரு கட்டத்தில், “நாம் விரும்பிய இடத்தை நோக்கிச் செல்லாமல், தவறான மலையில் ஏறிக்கொண்டிருக்கிறோமோ?” என்ற உணர்வு அவரை ஆழமாக சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக, 2022-ல் தனது வசதியான கூகுள் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான பஞ்சாபுக்குத் திரும்பும் முடிவை எடுத்தார்.
டெக் உலகில் இருந்து விவசாயத்திற்கு... ஒரு புதிய தொடக்கம்
பஞ்சாபுக்குத் திரும்பிய பிறகு, அவரது கவனம் முற்றிலும் வேறு திசைக்குச் சென்றது. உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார். குறிப்பாக, தனது குடும்பத்திற்கும் எதிர்கால தலைமுறைக்கும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வலுப்பெற்றது. இதுவே இயற்கை விவசாயத்தை ஒரு தொழிலாக மாற்றும் எண்ணத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
தனது உறவினரான டாக்டர் பல்ஜீத் சிங் கில் உடன் இணைந்து ‘கில் ஆர்கானிக்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார். சித்து தனது தொழில்நுட்ப அறிவு மற்றும் வணிக அனுபவத்தைப் பயன்படுத்தினார். மறுபுறம், பல்ஜீத் சிங் கில் விவசாயம் தொடர்பான தனது அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தினார்.
குடும்பங்களுக்கு ஒரு ‘ஃபார்ம்’ அனுபவம்!
இவர்களின் முயற்சியில் உருவான ‘கிளவுட் ஃபார்ம்’ திட்டம் வழக்கமான விவசாய முறைகளில் இருந்து வித்தியாசமானது. நகரங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் விவசாயத்திற்கும் இடையே ஒரு நேரடி தொடர்பை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பம் சுமார் ஆறு மாத காலத்திற்கு குறிப்பிட்ட விவசாய நிலத்தைப் பெற்று, தங்களுக்குப் பிடித்த காய்கறிகளை வளர்க்கும் அனுபவத்தைப் பெற முடியும்.
விதைப்பு முதல் பயிர் பராமரிப்பு, அறுவடை வரையிலான பணிகளைப் பண்ணைக் குழுவினர் கவனித்துக்கொள்கிறார்கள். குடும்பத்தினர் விரும்பினால் தங்களுக்கான நிலத்துக்குச் சென்று பயிர்களின் வளர்ச்சியை நேரடியாகப் பார்வையிடலாம். அல்லது அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை வீட்டிற்கே பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் மூலம் விவசாயம் என்பது வெறும் உணவு உற்பத்தி மட்டுமல்ல; குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும், குழந்தைகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தவும் உதவும் அனுபவமாக மாறுகிறது.
சம்பளம் குறைவுதான், ஆனால் சுதந்திரம் அதிகம்!
கூகுள் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தில் கிடைத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது, தற்போது சித்துவின் வருமானம் குறைவாக இருக்கலாம். ஆனால், அவர் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கையில் தனக்கான சுதந்திரம் அதிகமாக இருப்பதாகக் கருதுகிறார். தனது நேரம், உழைப்பு மற்றும் முடிவுகள் அனைத்தும் தற்போது தான் நம்பும் ஒரு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. அதிக சம்பளம், பெரிய பதவி ஆகியவை மட்டுமே வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிக்காது என்பதையே மந்தாஜ் சித்துவின் பயணம் உணர்த்துகிறது.
சில நேரங்களில் வாழ்க்கையில் நாம் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதைவிட, நாம் ஏறிக்கொண்டிருக்கும் மலை நமக்குப் பிடித்ததா என்பதுதான் முக்கியம். அந்த வகையில், கூகுளின் வசதியான வேலையை விட்டுவிட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்த சித்துவின் முடிவு, இன்றைய தலைமுறையினருக்கு சிந்திக்க வைக்கும் ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பாடமாக அமைந்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.