
ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டது. இந்த நிலையில், ஃபோர்டு மோட்டார் நிறுவனம் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த PLI திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
மத்திய அரசின் PLI திட்டத்திற்கு இந்தியாவில் இயங்கி வரும் 20 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஃபோர்டு மோட்டார் நிறுவனமும் இடம்பெற்று இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் மாணியம் வழங்கப்படும். இதற்கென ரூ. 25,983 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வியாபாரத்தை நிறுத்துவதாக அறிவித்து இருந்தது.
இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் உற்பத்தியை படிப்படியாக நிறுத்தி வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் PLI திட்டத்தில் ஃபோர்டு மோட்டார் தேர்வு செய்யப்பட்டு இருப்பது சந்தையில் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருப்பதால் மட்டும் ஃபோர்டு மீண்டும் தனது வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்க முடியாது.
வரும் காலங்களில் இந்தியாவில் தனது ஆலைகளில் வெளிநாட்டு சந்தைகளுக்கான எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க ஃபோர்டு திட்டமிட்டு வருகிறது. PLI திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஃபோர்டு நிறுவனம் 30 பில்லியன் டாலர்களை எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரி பிரிவுக்கு இந்த காலாண்டிற்குள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு சந்தைகள் மீது கவனம் இருந்தாலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது என ஃபோர்டு மோட்டார் இதுவரை நினைக்கவில்லை. "இதுபற்றி இப்போதைக்கு எந்த விதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. எனினும், எதிர்காலத்தில் இவ்வாறு செய்யக்கூடாது என எந்த திட்டமும் இல்லை," என ஃபோர்டு இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.